மதுபானம், குட்கா, புகையிலை போல போதைப் பொருளையும் மக்கள் வரி செலுத்தி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பியும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கே.டி.எஸ் துளசி குரல் எழுப்பியுள்ளார்.
கடந்த அக்டோபர் 2ம் தேதி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின், 23 வயது மகன் ஆர்யன் கான், மும்பை அருகே உல்லாசக் கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்தில் கலந்து கொண்ட போது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக, போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 3 வாரங்களுக்கு பின்னர் இன்று தான் அவருக்கு பெயில் கிடைத்துள்ளது.
ஆர்யன் கான் கைது விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு பல்வேறு சர்ச்சைகள் விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது.
இதனிடையே மது, குட்கா, புகையிலை போல போதைப் பொருட்களையும் வரி செலுத்தி மக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஒருவர் புதிய விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
Also read:
ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல – அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை
காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பியும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.டி.எஸ் துளசி செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், சீரான அளவில் மருந்துகள் வாழ்வின் தேவை என்றும், வரி செலுத்துவதன் மூலம் குட்கா, மது மற்றும் புகையிலை போன்ற பொருட்களை உட்கொள்ள அனுமதிப்பது போல போதைப் பொருட்களையும் அனுமதிக்க வேண்டுமென அவர் கூறினார்.
“போதைப் பொருட்கள் வலியை போக்குகின்றன. மது, குட்கா, புகையிலை கூட தீங்கு தான். ஆனால் இவற்றை வரி செலுத்தி நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படியிருக்க போதைப் பொருட்களுக்கு மட்டும் ஏன் தடை? போதைப் பொருட்களையும் வரி செலுத்தி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Also read:
மோடியின் பலம் பற்றி ராகுல் காந்தி புரிந்துகொள்ளவில்லை – பிரசாந்த் கிஷோர்
மேலும் அவருடைய இந்த பேச்சை நியாயப்படுத்தும் வகையில், “பல சந்தர்ப்பங்களில் மருந்துகள் மூலம் போதைப் பொருட்கள் உட்கொள்கிறோம், பிறகு ஏன் போதைப் பொருட்களின் பயன்பாடு அங்கீகரிக்கப்படக்கூடாது.?” என கேள்வி எழுப்பினார்.
போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (NDPS) 1985 சட்டத்தின் மூலம் பல நேரங்களில் மக்களுக்கு தொல்லை கொடுக்கப்படுவதால், குறிப்பிட்ட அளவில் போதை மருந்தை பயன்படுத்த வழிவகை செய்து இந்த சட்டத்தை சீரமைக்க வேண்டும் என துளசி கேட்டுக்கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.