புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து - உறுதிசெய்யப்படாத முதல்வர் வேட்பாளர்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து - உறுதிசெய்யப்படாத முதல்வர் வேட்பாளர்

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஒப்பந்தம்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

  • Share this:
    புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் முடிவுபெறாமல் இருந்தது. பா.ஜ.க, என்ஆர்.காங்கிரஸ் இடையே முதலமைச்சர் வேட்பாளர், தொகுதி பங்கீடு போன்ற சிக்கலால் இழுபறி நீடித்து வந்தது. கூட்டணி முறிந்துவிடும் என்ற நிலைக்கும் சென்றது. ஆனால் தொடர்ந்து இருதரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ’புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ரங்கசாமி தலைவராக இருப்பார். அவரது தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், பா.ஜ.க, அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்குள் தொகுதிகளை பிரித்துக்கொள்வோம். பாமவுக்கு சீட் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
    முதலமைச்சர் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள்’ என்று தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பேசிய என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, ’பாஜக- அதிமுகவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளோம். என்ஆர்.காங்கிரஸ் 16 தொகுதியில் போட்டியிடும். வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள். இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தொடர்ந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிறோம். மத்தியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். இதனால் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம் என கூறினார்.

    இதனைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் அதிமுக செயலாளர் அன்பழகன் கையெழுத்திடவில்லை. பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறி தவிர்த்து விட்டார். பின்னர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: