ஹோம் /நியூஸ் /இந்தியா /

தளர்ந்த நடையோடு மன்மோகன் சிங்.. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களித்த மூத்த தலைவர்கள்!

தளர்ந்த நடையோடு மன்மோகன் சிங்.. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களித்த மூத்த தலைவர்கள்!

வாக்களிக்க வந்த மன்மோகன் சிங்

வாக்களிக்க வந்த மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்களிக்க வந்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 95 சதவிகித வாக்குகள் பதிவானதாக, தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தலைவர் தேர்தலுக்கான அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிர்வாகிகள் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தனது மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் வந்து வாக்களித்தார். தேர்தல் நாளுக்காக தான் காத்திருந்ததாக சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களித்த சோனியா காந்தி

  சோனியா காந்தியை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை முடியாமல் உதவியாளர்கள் துணையுடன்  வாக்களிக்க வந்தார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் எம்.பி. உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் வாக்களித்தனர். தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை ஓட்டி சசிதரூர் தனக்கு தொலைபேசியில் வாழ்த்திய போது, தானும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்ததாக கூறினார்.

  இதையும் படிங்க: 230 கி.மீ வேகம் பத்தல, 300-ல ஓட்டு... பேஸ்புக் லைவ்வில் மாஸ் காட்ட நினைத்து மரணத்தை தழுவிய சோகம்

  மூத்த நிர்வாகிகளின் அதரவு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார் மற்றொரு வேட்பாளரான சசி தரூர் எம்பி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசின் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டதாக கூறினார்.

  பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழ் நாட்டில் 711 நிர்வாகிகள் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருந்தனர். மொத்தம் 662 வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக தலைவர் தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கூறினார்.

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 95சதவிகித வாக்குகள் பதிவானதாக, தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்தார். வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடைபெற்றதாகவும் அவர் கூறினார். புதன் கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பெரும்பாலான நேரங்களில் காந்தி குடும்பத்தினரே காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளனர். 1937, 1950, 1997 மற்றும் 2000 - ஆம் ஆண்டுகளில் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Indian National Congress, Manmohan singh