முகப்பு /செய்தி /இந்தியா / ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமான சேவை தொடக்கம்..

ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமான சேவை தொடக்கம்..

ஆகாசா ஏர் விமான சேவை இன்று தொடங்கியது

ஆகாசா ஏர் விமான சேவை இன்று தொடங்கியது

ஏர் ஆகாசா நிறுவனத்தின் முதல் விமான சேவை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

நாட்டின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்குபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. பங்குச்சந்தை முதலீடு மூலம் பெரும் கோடீஸ்வரான இவர், ஆகாசா ஏர் விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை வினய் தூபே, ஆதித்யா கோஷ் ஆகியோருடன் இணைந்து தொடங்கியுள்ளார்.

இந்த விமானத்தின் முதல் சேவை இன்று தொடங்கியுள்ளது. மும்பையில் இருந்து அகமதாபாத் பயணிக்கும் இந்த முதல் விமானத்தின் சேவையை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா காணொளி மூலம் தொடங்கி வைத்தார். விமான சேவையை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் சிந்தியா, 'இந்த ஆகாசா ஏர் நிறுவனம் இந்திய விமான சேவையில் புதிய விடியலாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விமானப் போக்குவரத்து துறை கடும் சவாலான காலத்தை எதிர்கொண்டது.

இந்த மோசமான சூழல் நீங்கி தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள வேளையில் ஆகாசா ஏர் புதிய நபராக இந்திய விமான போக்குவரத்து சேவையில் சேர்ந்துள்ளது. நாட்டின் விமான சேவைத்துறையை மேலும் ஜனநாயகபடுத்த் விரும்பியவர் பிரதமர் மோடி. அவரின் கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது நிறுவனத்தின் புதிய சேவை தொடங்கிய மகிழ்ச்சி குறித்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறுகையில், 'நாட்டின் அரசு நிர்வாக அமைப்பு மிக மோசமாக இருக்கும் என பொதுவாக மக்கள் கூறுவது உண்டு. ஆனால், கடந்த ஓராண்டாக எங்கள் முயற்சிக்கு விமானப் போக்குவரத்து துறை முழு ஒத்துழைப்பு தந்தது. இதற்காக அமைச்சர் சிந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக ஒரு குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகும். ஆனால் எங்களின் புதிய குழந்தை 12 மாதங்களில் பிறந்துள்ளது. விமான போக்குவரத்துதுறையின் உதவி இல்லாமல் இது சாத்தியம் அல்ல' என்றார்.

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க ஆகாசா ஏர் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல் கட்டமாக 18 விமானங்களையும் மொத்தம் 72 விமானங்களையும் வாங்க ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மும்பை-அகமதாபாத் சேவை இன்று தொடங்கிய நிலையில், பெங்களூரு-கொச்சி இடையேயான சேவை ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிங்க: வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுங்கள்..பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணம் 4,314 ரூபாய் என்றும், அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் விமானத்திற்கான கட்டணம் 3,906 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூருவிலிருந்து கொச்சிக்கு செல்லும் விமான கட்டணம் 3,483 ரூபாயில் தொடங்கும் என்றும், கொச்சியில் இருந்து பெங்களூரு திரும்பும் விமான டிக்கெட் 5,008 ரூபாயில் இருந்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பெங்களூரு, கொச்சி, மும்பை, அகமதாபாத் என 4 நகரங்களை இணைக்கும் ஆகாசா விமான நிறுவனம் அடுத்தடுத்து கூடுதல் சேவைகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Flight, Flight travel