டெல்லியில் அபாய அளவைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிகவும் அபாய அளவான 500 புள்ளிகளைத் தாண்டியது. அதனால் இரு நாட்களுக்கு முன்பு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதோடு பள்ளிகளுக்கும் நாளை மறுநாள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு டேங்கர் லாரிகள் மூலம் சாலைகளில் தண்ணீரைத் தெளித்து மாசை குறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியின் 9 இடங்களில் இன்று காற்றின் தரக்குறியீடு 900 புள்ளிகளைத் தாண்டியது. பவானா பகுதியில் காற்றின் தரக்குறியீடு 999ஆக அதிகரித்தது.
காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் பொதுமக்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்படும் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, பஞ்சாபி பாங் (Punjabi Bagh) பகுதியில் தடையை மீறி கட்டுமான பணியில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் எனப்படும் காற்று தரக்குறியீடு, 2014-ம் ஆண்டு முதல் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. காற்று தரக்குறியீடு 0-50 வரை பதிவானால் மிகக்குறைந்த பாதிப்பு ஏற்படும். 51-100 வரை இருந்தால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எளிதில் சுவாசக்கோளாறு ஏற்படும். 101-200 வரை இருந்தால் ஆஸ்துமா, இதயக்கோளாறு உள்ளவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். 201-300 வரை பதிவானால் இதய நோய் உள்ளவர்களுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படும். 301-400 வரை பதிவானால் இதய, நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மிகமோசமான விளைவுகள் ஏற்படும். 401-500 வரை பதிவானால் நல்ல உடல்நிலையோடு உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.