உலகின் மிக நீண்ட விமான பாதையில் பயணித்த முதல் பெண் விமானி என்ற சாதனையை படைத்த இந்தியர்!

சோயா அகர்வால்

சோயாவிற்கு 8 வயதாக இருக்கும் போது அவருக்கு பைலட்டாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. தற்போது அவர் அதிக தூரம் பறந்து இந்தியப் பெண் விமானி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு கடந்த ஜனவரி 9ம் தேதி சோயா அகர்வால் என்ற விமானி தலைமையிலான பெண் விமானிகள் பயணித்து வந்துள்ளனர். இது சவால் நிறைந்த, மிக நீண்ட தூர பயணமாகும். உலகின் மிக நீண்ட பாதையில் விமானம் இயக்கிய முதல் பெண் விமானி என்ற சாதனையை சோயா அகர்வால் பெற்றார்.

  இந்த அனுபவம் குறித்து அவர் ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற இதழுக்கு பேட்டியளித்தார். அதில் தான் விமானியாக மாற அவர் அடைந்த கஷ்டங்களை தெரிவித்திருந்தார். சோயாவிற்கு 8 வயதாக இருக்கும் போது அவருக்கு பைலட்டாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. தினமும் வீட்டு மாடிக்கு சென்று விமானம் பறப்பதை பார்த்திருக்கிறார். அப்போது நாமும் இந்த விமானத்தில் பறந்தால் வானத்தை தொடலாம் என்று நினைத்திருக்கிறார்.

  நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவருக்கு தனது கனவுகள் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க தயங்கியிருக்கிறார். அதனால் தனது கனவுகளை சுருக்கியிருக்கிறார். ஆனால் அந்த கனவு அவரை விட்டு அகலவில்லை. 10 ஆம் வகுப்பு படிக்கும்போது தனது விமானி ஆகும் கனவு குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை கேட்ட அவர்கள் விமானி பயிற்சிக்கு ஆகும் செலவு குறித்து கவலையடைந்திருக்கின்றனர்.

  ஆனால் சோயா பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் அறிவியலை பாடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற அவர் கல்லூரியில் இயற்பியலை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதே நேரம் விமானம் குறித்த படிப்பையும் தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார். அதற்காக தனது எல்லா சேமிப்புகளையும் கொடுத்து அந்த படிப்பிற்கு கட்டணம் செலுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் காலேஜ் படித்தால் அந்த சிட்டியின் மற்றொரு பக்கம் இருக்கும் ஏவியேசன் கோர்ஸ் நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

  அவர் தனது படிப்பை முடித்து கல்லூரியில் முதலாவதாக வந்திருக்கிறார். பின்னர் தனது பெற்றோரிடம் சென்று தனது கனவுகளை பற்றி சொல்லியிருக்கிறார். இதனையடுத்து சோயாவின் பெற்றோர்கள் வங்கிக் கடன் வாங்க சம்மதித்திருக்கிறார்கள். அதன் பிறகு விமான பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் அவரது போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. வேலை கிடைக்க 2 வருடங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

  பின்னர் ஒரு வழியாக அவருக்கு ஏர் இந்தியாவில் வேலை கிடைத்திருக்கிறது. வெறும் 7 பணியிடங்களுக்கு அவருடன் 3000 பேர் போட்டியிட்டிருக்கின்றனர். அவரது தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன் அவரது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அவரது தந்தையை விட்டு போக முடியாத நிலையில் தவித்திருக்கிறார். இருப்பினும் அவரது தந்தை அவரை தேர்வெழுத போக சொல்லியிருக்கிறார். அதன் பிறகே மும்பை வந்து தனது தேர்வை எழுதியிருக்கிறார். அவர் எல்லா தேர்வையும் திறம்பட முடித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

  கடந்த 2004 ஆம் ஆண்டு அவரது கனவு முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது. விமானியாக தனது விமானத்தை துபாய் நோக்கி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு அவர் திரும்பி பார்க்கவேயில்லை. பறந்துகொண்டேயிருக்கிறார். இந்த வருடம் கடந்த ஜனவரி 9ம் தேதி அவர் முதல் பெண் விமானியாக இரண்டு எதிர் துருவங்களை கடந்திருக்கிறார். அவருக்கும் அவருடன் பயணித்த சக பெண் விமாணிகளுக்கும் பெங்களூரு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கிடைத்தது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: