மூத்த குடிமக்களுக்கு 50% கட்டணச் சலுகை- ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ஏர் இந்தியா

உள்நாட்டுக்குள் விமானப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விமான போக்குவரத்துக்கும் அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, ஒரு விமானத்தில் 80 விழுக்காடு பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதி கொடுத்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே, விமான பயணிகளை கவரும் வகையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50% வரை கட்டணச் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

  பயணம் மேற்கொள்ளும் நாளில் 60 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும், உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது. பன்னாட்டு சேவைகளுக்கு இந்த சலுகையை கோர முடியாது என தெரிவித்துள்ளதுடன், சலுகை பெறும் மூத்த குடிமக்கள் எக்னாமிக் வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

  பயணம் மேற்கொள்ளும் நாளில் இருந்து 3 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் புக் செய்ய வேண்டும், 60 வயது பூர்த்தியடைந்ததற்கான சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஏர் இந்தியா வழங்கியுள்ள மூத்த குடிமக்களுக்கான அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.

  மேலும், பயணம் மேற்கொள்ளும் நாளன்றும் 60 வயது பூர்த்தியடைந்ததற்கான சான்றுடன் செல்ல வேண்டும், இல்லையென்றால் பயணத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏர் இந்தியா தெளிவாக கூறியுள்ளது. 

  செக் - இன் செய்யும்போது அடையாள அட்டை காண்பிக்காத மூத்த குடிமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுப்பதுடன், டிக்கெட் கட்டணமும் திருப்பித் தர மாட்டாது என ஏர் இந்தியா கூறியுள்ளது. 50 விழுக்காடு டிக்கெட் குறைப்பு என்பது விமானக் கட்டணத்தின் அடிப்படை கட்டணத்தில் இருந்து மட்டுமே சலுகை வழங்கப்படும். வரி உள்ளிட்ட இதர கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படும்.

  மேலும், ரீ பன்ட் விதிமுறைகளின்படி மட்டுமே பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது. சிறுவர்களுக்கு எந்த விமான கட்டண சலுகையும் அறிவிக்கவில்லை. 2 வயதுக்கும் குறைவாக உள்ள ஒரே ஒரு குழந்தையை மட்டும் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  கிறிஸ்துமஸ் விளம்பரத்தை பார்த்து கண்ணீர் விட்ட ஆனந்த் மஹிந்திரா.. நீங்கள் யாருக்காக இவ்வளவு முயற்சி எடுப்பீர்கள்?

  குறிப்பாக, மூத்த குடிமக்கள் அதிகமானோர் ஏர் இந்தியாவின் விமான பயணத்தை மேற்கொள்ள விரும்புவார்கள். கொரோனா பரவல் காரணமாக ரயில் மற்றும் பேருந்து பயணங்களை விட விமானப் போக்குவரத்து சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விமான போக்குவரத்தில் முறையாக கடைபிடிக்கப்படுவதால், மூத்த குடிமக்களின் தொலைதூர பயணத்துக்கான முதல் தேர்வு விமான பயணமாகவே இருக்கும். அதிலும், கட்டணச் சலுகை வழங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தையே அதிகம் தேர்தெடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: