மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 40 விவசாய சங்க தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து இருக்கின்றனர்.
வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத், “விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் மத்திய அரசை அமைதியாக இருக்க வேளாண் அமைப்புகள் விடக் கூடாது.
40 லட்சம் டிராக்டர்களை கொண்டு இம்முறை பேரணி நடத்தப்படும். இதில், நாடு முழுவதும் ஆதரவை பெறுவதற்காக 40 தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
Must read: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம்: அசாமில் ராகுல் காந்தி பேச்சு
இந்த இயக்கத்திற்காக ஒவ்வொருவரும் இணைந்துள்ளனர். நாட்டின் எதிர்காலம் பற்றி விவசாயிகள் இனி முடிவு செய்வார்கள்” இவ்வாறு கூறியுள்ளார்.