ஆக்ராவில் காருக்குள் 4 அடி நீள மலைப்பாம்பு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், வனவிலங்கு ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் எல்.ஐ.சி காலணி பகுதியில் குருமீத்சிங் என்பவர் வசித்து வருகிறார். தன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் காரின் முன்பகுதியில் ஏதோ வித்தியாசமாக சத்தம் எழுவதைக் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, முன்பகுதியில் இருக்கும் bonnet -ஐ திறந்து பார்க்கும்போது 4 அடி நீள மலைப்பாம்பு ஒன்று மிகவும் குறுகலான கம்பிகளுக்கு இடையே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், அருகில் இருந்த வனவிலங்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த வனவிலங்கு ஆர்வலர்கள், காருக்குள் சிக்கியிருந்த 4 அடி நீள பாம்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதுகுறித்து பேசிய குருமீத்சிங், "காருக்குள் 4 அடி நீள மலைப் பாம்பு இருப்பதை பார்த்தவுடன் எங்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த பாம்பானது மிகவும் குறுகலான கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தது. உடனடியாக, வனவிலங்கு அமைப்புக்கு நாங்கள் தகவல் அளித்துவிட்டோம். தாமதமின்றி விரைவாக வந்த வனவிலங்கு ஆர்வலர்கள், காருக்குள் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். அவர்கள் வந்து பாம்பை மீட்கும் வரை நாங்கள் பயத்துடனேயே இருந்தோம்" என்றார்.
இதுகுறித்து பேசிய Wildlife SOS அமைப்பினர் நிறுவனர் சத்ய நாராயணன், " எங்கள் அமைப்பு உருவாவதற்கு இதுபோன்ற சூழல்கள் தான் காரணம். பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன தொடர்பாக தவறான தகவல்கள் மக்களிடையே அதிகம் இருப்பதால், அவற்றை கண்டவுடன் அடித்துக் கொள்கின்றனர். அதனை தடுத்து, ஊர்வன இனங்கள் தொடர்பாக மக்களிடையே நல்ல புரிதலை ஏற்படுத்துவது தான் எங்களின் முக்கிய நோக்கம். அதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி பாம்புகளைப் பற்றிய உண்மையான தகவல்களை எடுத்துரைத்து வருகிறோம்" என்றார்.
Wildlife SOS அமைப்பின் இயக்குநரான பைஜூ ராஜ் பேசும்போது, "வெப்பநிலைகள் குறையும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு நுழைவுது இயல்பு. ஆனால், இத்துறையில் நிபுணத்துவம்பெற்ற பாம்பு பிடிப்பார்கள் உடனடியாக பாம்பு சிக்கியிருக்கும் பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட முன்வரவேண்டும். அப்போது தான் ஊர்வன இனங்களின் அழிவைத் தடுக்க முடியும். எங்கள் அமைப்பு 24 மணி நேரமும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறது என்றார். மேலும் பாம்புகளை மீட்பதற்கு எந்ததொகையையும் வாங்குவதில்லை" என்று அவர் கூறினார்.
ஆக்ராவில் காருக்குள் இருந்த மலைப்பாம்பு இந்திய மலைப்பு வகையைச் சார்ந்தது எனத் தெரிவித்த அவர்கள், அவற்றுக்கு விஷமில்லை என கூறினர். இந்தவகை பாம்புகள் பொதுவாக சதுப்பு நிலக்காடுகளில், மலைப்பிரதேசங்கள், பசுமையான புல்வெளிகளில் வாழ்பவையாகும். இந்தியா, பூட்டான், வங்கதேசம் மற்றும் இலங்கையில் காணப்படும் இந்தவகை விஷமில்லாத மலைப்பாம்புகள், வௌவால்கள், புனுகுபூனைகள், மான் உள்ளிட்டவைகளை உணவாக எடுத்துக்கொள்கின்றனர்.