நிலக்கரி கடத்தல் வழக்கு: அபிஷேக் பானர்ஜி மனைவி, மைத்துனிக்கு சிபிஐ சம்மன்

மமதா பானர்ஜியின் மருமகன்

நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த வெள்ளியன்று கொல்கத்தா, புருலியா, பன்குரா மற்றும் பஷ்சிம் பர்தமான் ஆகிய மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

  • Share this:
நிலக்கரி கடத்தல் வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய சில மணி நேரங்களுக்குள் அபிஷேக்கின் மைத்துனிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ள நிலக்கரி கடத்தல், சாரதா சிட் பண்ட் வழக்குகளின் விசாரணை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் அக்கட்சியின் அதிகாரமிக்க தலைவருமாக விளங்கி வரும் எம்.பி அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ இன்று சம்மன் அனுப்பியது. அபிஷேக் பானர்ஜியின் மனைவி மேனகா காம்பீர் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராஜ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதே வழக்கில் அபிஷேக் பானர்ஜியின் மனைவியின் சகோதரிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த வெள்ளியன்று கொல்கத்தா, புருலியா, பன்குரா மற்றும் பஷ்சிம் பர்தமான் ஆகிய மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

மேற்கு வங்க அரசியலில் மைய புள்ளியாக இருப்பவர் அபிஷேக் பானர்ஜி. மம்தா பானர்ஜி தன்னுடைய மருமகனை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சரிவை சந்தித்தது. பாஜக மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக பணியாற்றி வருகிறது. தன்னுடைய குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தன்னை பாஜக டார்கெட் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Published by:Arun
First published: