சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவசாயிகள் போராட்டம் - கமலா ஹாரீஸ் குடும்பத்தில் இருந்து ஆதரவு குரல்!

கமலா ஹாரீஸின் தங்கை மகளான மீனா

மீனா ஹாரீஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரீஸின் உறவினர் ஆவார். அதிபர் தேர்தலில் பைடன், கமலா ஹாரீஸின் தேர்தல் உத்தி வகுப்பாளராகவும் இருந்துள்ளார் என்பதால், அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • Share this:
கிரேட்டா தன்பெர்க், பாப் பாடகி ரிஹானா வரிசையில் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரீஸூம் குரல் கொடுத்துள்ளதால், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையோரங்களில் தங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரையில் திரைநட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவிலும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக சர்வதேச சூழலியல் போராளியான, சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க், போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான ரிஹானாவும், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்த செய்தியை பகிர்ந்து ஏன் யாரும் இதைப்பற்றி பேசுவதில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமலா ஹாரீஸின் தங்கை மகளான மீனா


100 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவெர்ஸை வைத்துள்ள ரிஹானாவின் இந்த டிவீட் உடனடியாக சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் பதிவிட்ட டிவீட் சுமார் 10 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேலான ரீடிவீட், 4 லட்சத்துக்கும் மேலான லைக்குகளை பெற்றது. உடனடியாக #RihannaSupportsIndianFarmers என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் டிரெண்டானது. இதனைத்தொடர்ந்து, அமெரிக்க துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரீஸின் தங்கை மகளான மீனா ஹாரீஸூம், இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டரில், உலகத்தின் பழமையான ஜனநாயகம் கொண்ட நாட்டில் ஒரு மாதத்துக்கு முன்புதான் தாக்குதல் நடந்தது. அதற்குள்ளாக, உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும், இந்த இரு தாக்குதல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனக் கூறியுள்ள மீனா ஹாரீஸ், விவசாயிகள் போராட்டத்தை துணை ராணுவத்தை கொண்டு ஓடுக்குவதையும், இணையதளம் துண்டிக்கப்படுவதற்கும் எதிராக, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என காரசாரமாக அழைப்பு விடுத்துள்ளார். அவரின் இந்தப் பதிவும், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை சர்வதேச அளவில் முக்கிய பிரச்சனையாக மாற்றியுள்ளது.

இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய விவசாயிகள் தொடர்பாக விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், பெரும்பகுதி விவசாயிகள் போராட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மிக மிக குறைவான விவசாயிகளே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இதனை உலக நாடுகள் இந்தியாவின் ஜனநாயக மாண்பாக பார்க்க வேண்டுமே தவிர, பிரச்சனையாக பார்க்கக்கூடாது எனக் விளக்கம் கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்பட்டு, வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் தற்காலிகமாக அந்த சட்டங்களை நிறுத்தி வைக்கவும் தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மீனா ஹாரீஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரீஸின் உறவினர் ஆவார். அதிபர் தேர்தலில் பைடன், கமலா ஹாரீஸின் தேர்தல் உத்தி வகுப்பாளராகவும் இருந்துள்ளார் என்பதால், அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

 
Published by:Arun
First published: