Home /News /national /

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கால் மசாஜ் மையம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கால் மசாஜ் மையம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கால் மசாஜ் மையம் அமைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கால் மசாஜ் மையம் அமைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக ரொட்டி மெஷினுக்கு அடுத்ததாக கால் மசாஜ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னதாக உணவு தயாரிக்கும் ரொட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சிங்கு எல்லையில் கால் மசாஜர்கள் மற்றும் தற்காலிக ஜிம்கள் நிறுவப்பட்டுள்ளன. மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 17வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டம், விளைபொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள விதிகளைத் தளர்த்தியது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியடைந்தது.

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்திருந்தாலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து அதில் எதுவும் குறிப்பிடாததால், விவசாயிகள் மத்திய அரசின் உறுதிமொழியை நிராகரிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் போராட்டம் ஆரம்பித்த நாள் முதலே இவர்கள் சாலையோரங்களில் உறங்குவது மட்டுமல்லாமல் சமைத்து சாப்பிட்டும் வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒரு பெரிய ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில் சுமார் 1,500 முதல் 2,000 சப்பாத்திகளைத் தயாரிக்கும்.

Also read: ரஜினிகாந்த் பிறந்தநாள்: யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்...

மேலும், எல்லைகளில் போராடும் விவசாயிகளில் பலர் வயதானவர்கள். அவர்கள் ஆரோக்கியமாகவும் நலமுடன் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான கல்சா எய்ட் எல்லைகளில் கால் மசாஜ் மையத்தை அமைத்துள்ளது. ஒரு கூடாரத்திற்குள் சுமார் 25 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விவசாயிகள் தலா பத்து நிமிடங்கள் அமர்ந்து கால் மசாஜ் செய்துகொள்ளலாம்.

டெல்லி போராட்டம்.
(படம்: ட்விட்டர்)


இதுகுறித்து பேசிய கல்சா எய்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அமர்பிரீத், "நாங்கள் சிங்கு எல்லையில் நீண்ட காலமாக போராடி வரும் வயதான விவசாயிகளுக்காக கால் மசாஜ் செய்யும் இயந்திரங்களை அமைத்துள்ளோம். ஏனெனில் அவர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள்" என்று கூறினார். இந்த மசாஜ் கூடம் அமைக்கப்பட்ட முதல் நாளிலேயே 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தினர்.

என்.டி. டி.வியின் அறிக்கையில், விவசாயிகள் பலரும் போராட்டக் களத்தை அடைய நீண்ட தூரம் பயணித்து வந்ததால், அவர்கள் இந்த ஏற்பாடுகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளது. இதேபோல, கல்சா எய்ட் ஃபவுண்டேஷன், தேநீர் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு ஏற்பாடுகளைச் செய்து விவசாயிகளுக்கு உதவியுள்ளது. மேலும் அறக்கட்டளை வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களுக்காக போராட்டக் களத்தில் 20 மொபைல் கழிப்பறைகளை அமைத்து கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published:

Tags: Farmers Protest Delhi

அடுத்த செய்தி