பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற அக்கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி கட்சி என்று எதிர்க்கட்சிகளால் ஆம் ஆத்மி விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாரம்பரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, பிரமாண்ட வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் அக்கட்சி 90 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தேர்தல் வெற்றி ஆம் ஆத்மி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில், அதிக இடங்களைக் கைப்பற்றுவதற்கு அக்கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க - Cyclone Asani: வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு
கடந்த 2018 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் ஆம் ஆத்மி 142 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அக்கட்சி மொத்தமே 0.4 சதவீத வாக்குகளை மட்டுமே தக்க வைத்தது.
இதையும் படிங்க - அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது ஜப்பான்
முதற்கட்டமாக கட்சியை ராஜஸ்தானில் வலுப்படுத்தும் நோக்கில், வரும் 26, 27 ஆகிய தேதிகளில் முக்கிய ஆலோசனைக் கூட்டம், மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜஸ்தான் மாநில இணை பொறுப்பாளர் ஜகிர்தார் கூறுகையில், 'ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலுக்கும் நாங்கள் தயாராகி வருகிறோம். பஞ்சாபின் அண்டை மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. டெல்லிக்கு அருகிலும் ராஜஸ்தான் இருக்கிறது. எனவே, ராஜஸ்தானில் முக்கிய விளைவுகளை எங்களால் ஏற்படுத்த முடியும். முன்னதாக மாநிலத்தை கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். அதன் அடிப்படையில் 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது' என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.