கேரளாவில் இடதுசாரிகளிடம் இழந்த இடத்தை பிடிக்க முற்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முயற்சிகளுக்கு முட்டுப்போட்டு அக்கட்சியின் ஓட்டுகளை கவரும் வகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் வலுவாக கால் ஊன்றும் பொருட்டு ‘மிஷன் சவுத்’ என்ற அதிரடி திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக
மெட்ரோ மேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் அண்மையில் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்தார்.
பாஜகவில் இணைவது குறித்து ஸ்ரீதரன் கூறுகையில், “நான் 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வருகிறேன். இங்கு இதுவரை ஆட்சியில் இருந்து இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சரியான முறையில் ஆட்சி புரியவில்லை, மாநில வளர்ச்சிக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. தொழில்மயமாக்கல் மற்றும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அடிப்படையில் நிறைய விஷயங்கள் சாத்தியமாகும்.கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. பாஜக வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது என்றார். பாஜகவில் இணைவது என்பது திடீர் முடிவு அல்ல என்றும் அவர் கூரினார்.
ஸ்ரீதரனை அடுத்து இந்தியாவின் தங்க மங்கை என்றழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீராங்கனை, ஒலிம்பிக் சாம்பியன் பி.டி.உஷாவை பாஜகவில் இணைக்க அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் இது பல கேரளவாசிகளுக்கு பி.டி.உஷா பாஜகவில் இணைவார் என்று வெளியாகும் செய்தி ஆச்சரியம் அளிப்பதாக இருக்காது. பி.டி.உஷா ஏற்கனவே மத்திய அரசுக்கு ஆதரவாக பல கருத்துக்களை எதிரொலித்துள்ளார், அதே போல சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களையும் அவர் ஆதரித்துள்ளார். அவரின் சமூக வலைத்தள கணக்குகளில் வெளியான பதிவுகளை அனைத்தும் அவர் பாஜகவுக்கு ஆதரவானவர் என்பதையே காட்டியுள்ளது.
மேலும் சமீபத்தில் சூழலியர் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், பாடகி ரிஹான்னாவின் கருத்துக்களை கண்டித்து அவர்களுக்கு எதிராக பி.டி.உஷா ட்விட்டரில் கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் பருவ வயது பெண்களை சபரி மலை கோவிலுக்குள் மாநில அரசு அனுமதி அளித்ததற்கு எழுந்த எதிர்ப்பை பாஜக பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. மேலும் சினிமா, சமூகம் சார்ந்த நட்சத்திரங்களை கட்சிக்குள் இணைக்க பாஜக தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.