மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆவாரா ராகுல் காந்தி? : டெல்லியை தொடர்ந்து சட்டீஸ்கரிலும் ராகுலை தலைவராக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆவாரா ராகுல் காந்தி? : டெல்லியை தொடர்ந்து சட்டீஸ்கரிலும் ராகுலை தலைவராக்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ராகுல் காந்தி

கடந்த வாரம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

  • Share this:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என சட்டீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

2019-ல் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. அமேதி, வயநாடு என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அதற்கு பொறுப்பேற்று பல மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இதன் எதிரொலியாக தாமாக முன்வந்து தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதன் பின்னர் கட்சியின் ஸ்திரத்தன்மையை காக்கும் பொருட்டு சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார்.

சோனியா காந்தியின் உடல்நிலை காரணமாக அவரால் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இந்த நிலையில் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என பலரும் வற்புறுத்திய போதும் அவர் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சோனியாவுக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இரண்டு முறை காங்கிரஸ் காரிய கமிட்டி கூடிய போதும் தலைவர் தேர்வு, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே கடந்த வாரம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தற்போது இருக்கும் அரசியல் சூழலில் ராகுல்காந்தியை போன்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் தான் தேவை என டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் பேசியிருந்தார்.

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியிலும் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் முன்மொழிந்த இத்தீர்மானத்தை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.பூனியா மற்றும் அம்மாநில காங் தலைவர் மோகன் மார்கம் ஆகியோர் வழிமொழிந்தனர்.

வரும் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு நடத்தப்பட இருக்கும் சூழலில் டெல்லி, சட்டீஸ்கர் என இரண்டு மாநிலங்களில் அடுத்தடுத்து ராகுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: