• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆப்கானிஸ்தானின் புதிய அரசை ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வி எழுந்துள்ளது - பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானின் புதிய அரசை ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வி எழுந்துள்ளது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் நிலையற்ற தன்மை நீடித்தால், வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.

  • Share this:
    ஆப்கானிஸ்தானில் உரிய விவாதம் நடத்தப்படாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய அரசை ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதிய அரசை ஏற்றுக் கொள்வதா என்பதை சர்வதேச சமூகம் முடிவுசெய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  அப்போது, ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உடன்படிக்கை வெளியிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றும்,பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.இது புதிய அரசை ஏற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புவதாகவும், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    புதிய அரசை அங்கீகரிப்பதா என்பது குறித்து ஒருங்கிணைந்தும், உரிய விவாதங்களுக்குப் பிறகும் சர்வதேச சமூகம் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில், ஐநா அமைப்பின் தலைமை செயல்பாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். ஆப்கானிஸ்தானுக்கு இன்றும்கூட உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பிவைக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

    ஆப்கானிஸ்தானில் தீவிர மனிதநேய நெருக்கடி இருப்பதாகவும், நிதி மற்றும் வர்த்தகத் தடைகளால், ஆப்கானிஸ்தான் மக்களுக்கான நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதத்தைப் பரப்புவதற்கு ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

    ஆப்கானிஸ்தானில் நிலையற்ற தன்மை நீடித்தால், வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று மற்ற தீவிரவாத அமைப்புகள் கருத வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய நடவடிக்கைகள், ஆயுதங்கள், போதை மருந்துகள் மற்றும் ஆட்களை கடத்துவது அதிகரிக்கும் சூழலை அதிகரிக்கச் செய்யும் என்று நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

    ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள், நம்மைப்போன்ற அண்டை நாடுகளுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: