சினிமாவில் நிறைய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான சோனு சூட், கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை செய்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகி உள்ளார். இந்தியாவை கொரோனா தொற்று தாக்கிய பிறகு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக உருவெடுத்த 47 வயதான நடிகர் சோனு சூட், ஊரடங்கில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என பல தரப்பினருக்கு ஏற்பட்ட நெருக்கடியை போக்க பணமாகவும், பொருளாகவும் உதவிகளை வாரி வழங்கினார்.
குறிப்பாக ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர்ந்தோரின் சிரமத்தை போக்கும் வகையில் அவர்களை தத்தம் வீடுகளுக்கு பத்திரமாக திருப்பியனுப்ப சொந்த செலவில் ஏராளமான பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்து நாட்டு மக்களின் அன்பிற்கு பாத்திரமானார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது நடிகர்
சோனு சூட் தனது உன்னத சேவைகளை மேலும் விரிவுபடுத்தினார். சில மாதங்களுக்கு முன் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறைக்கு மத்தியில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாடு தவித்துக் கொண்டிருந்தது.
மக்களின் நிலைமையை கண்டு மனம் வருந்திய சோனு சூட், இரண்டாம் அலையில் சிக்கி நாடு பரிதவித்த நிலையில் மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் பிற உயிர் காக்கும் உபகரண தேவைகள் பற்றி ட்விட்டரில்
கோரிக்கை விடுத்த நோயாளிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க தவறவில்லை. தனி நபர்களின் மருத்துவ கோரிக்கை, மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைகளின் கோரிக்கை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் போன்ற முக்கிய மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய கோரிக்கையுடன் சோனு சூட்டை அணுகிய பெரும்பாலானோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்தார்.
இதில் உச்சகட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்கு நிதி சேர்க்க தனது சொத்துகளை அடமானம் வைத்த தகவல் மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சோனு சூட், இன்னமும் தனது ட்விட்டர் பக்கத்தில் எண்ணற்ற உதவி கோரிக்கைகளை பெற்று வருகிறார். பலர் அத்தியாவசிய கோரிக்கைகளை, உதவிகளை நடிகரிடம் கேட்கும் நிலையில் சமீபத்தில் ஒரு நபர், ட்விட்டரில் சோனு சூட்டிடம் வித்தியாசமான மற்றும் வேடிக்கையான உதவியை கேட்டு அவரை அணுகி உள்ளார்.
இன்ஜினியர் லட்கா (Engineer Ladka) என்ற ட்விட்டர் யூஸர் ஒருவர், ஐபோன் கேட்கும் தனது காதலிக்காக ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று நடிகரிடம் கேட்டுள்ளார். இதற்கு வேடிக்கையாக ஒரு ரிப்ளை கொடுத்துள்ள சோனு, ‘ஒருவேளை நீங்கள் உங்கள் காதலிக்கு அவர் விரும்பியபடி ஒரு ஐபோனை பரிசாக கொடுத்தால், உங்களிடம் எதுவும் மிச்சம் இருக்காது’ என்று கூறி ஸ்மைலி எமோஜியை பதிவிட்டு எச்சரித்துள்ளார். பெருந்தொற்று காலத்திற்கு மத்தியில் உயிர் காக்கும் பல அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு உதவி வரும் சோனு சூட்டிடம் இப்படிப்பட்ட உதவி கோரிய யூஸரை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.