ஹோம் /நியூஸ் /இந்தியா /

உங்கள் ஹீரோக்களை கவனமாக தேர்ந்தெடுங்கள், எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் - விவசாயிகளுக்கு ஆதரவாக சித்தார்த் ட்வீட்..

உங்கள் ஹீரோக்களை கவனமாக தேர்ந்தெடுங்கள், எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் - விவசாயிகளுக்கு ஆதரவாக சித்தார்த் ட்வீட்..

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்

எந்த நிலைப்பாட்டையும் எதிலும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள். இதுதான் இவர்களின் பிரச்சாரம்” என்று விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் ‘போலீஸாருடன் விவசாயிகள் மோதல்- புதுடெல்லியில் இண்டெர்நெட்டை கட்’என்ற சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து பாப் பாடகி ரிஹானா ‘நாம் ஏன் இது பற்றி பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க், முன்னாள் போர்ன் ஸ்டார் மியா கலிஃபா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர்.

  இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ரிஹானாவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பதிலளித்து வருகின்றனர். ரிஹானாவுக்கு நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்‌ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  மத்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுமைகள் மற்றும் நடிகர்களின் ட்வீட் விவசாயிகள் போராட்டத்தில் எந்த தெளிவும் இல்லாமல் போடப்படுகிறது எனவும் இது சரியான செயல்பாடு அல்ல எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிஹானா, க்ரேட்டா தன்பெர்க் பதிவுகளுக்கு எதிராக பாலிவுட்டில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

  சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், “போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்வது எப்படி நாட்டின் இறையாண்மையைக் கெடுக்கும்? சச்சின் டெண்டுல்கர் தன்னைத் தவிர யாருக்காகவும் நிற்காதவர். யாரேனும் ட்வீட் செய்யச்சொல்லி செய்திருப்பார். ஹீரோக்களாக நினைப்படுபவர்கள் பெரும்பாலும் அப்படியில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

  பாலிவுட் பிரபலங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களின் ட்வீட்டுக்கும் பதிலடியாக  ட்வீட் செய்துள்ள நடிகை டாப்ஸி, “ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

  ரிஹான்னா ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக "பெருமைமிகு இந்தியனாக, நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளது. மக்களின் நலனை மனதில் வைத்து பிரச்சனையை சரிசெய்துகொள்ளும் திறன் நமக்கு உள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்.

  பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் விவசாயிகளின் பிரச்சனைகளை நாடு பார்த்துக்கொள்ளும், வெளிநாட்டவர்கள் இதில் கருத்து தெரிவிக்க தேவையில்லை என்ற வகையில் கருத்து தெரிவித்து வரும் இந்த நிலையில், நடிகர் சித்தார்த், “உங்கள் ஹீரோக்களை கவனமாக, அறிவுப்பூர்வமாக தேர்ந்தெடுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்துகொள்ளும் தன்மையும்தான் தேவை. எந்த நிலைப்பாட்டையும் எதிலும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள். இதுதான் இவர்களின் பிரச்சாரம்” என்று விமர்சித்துள்ளார்.

  Published by:Gunavathy
  First published:

  Tags: Actor Siddharth, Delhi chalo, Farmers Protest, Greta Thunberg, Mia Khalifa, Rihanna, Taapsee Pannu