முதலமைச்சர் பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடைபெறாது என்றும், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீகக் கிராமத்தில் நடைபெறும் என ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிற்பகல் நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117-ல் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி, ஆட்சியைப் பிடிக்கிறது.
இதையடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கட்சி அலுவலகம் முன்பு கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், 'பஞ்சாப் முதல்வரின் பதவியேற்பு விழாவானது ராஜ் பவனில் நடைபெறாது. அதற்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீகக் கிராமமான நவன்ஜஹர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் நடைபெறும்.
இதையும் படிங்க - ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!
பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சரின் புகைப்படங்கள் இடம் பெறாது. அதற்கு பதிலாக அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்கள் இருக்கும்' என்று தெரிவித்தார்.
பள்ளிகள், சுகாதாரம், தொழில்துறை, விவசாயத்தை லாபகரமாக்குதல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தான் பதவியேற்ற பிறகு தனது முதல் உத்தரவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே மாதத்தில் பஞ்சாபில் நீங்கள் மாற்றத்தை காணத் தொடங்குவீர்கள் என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை, என்றும் ஏனெனில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்த அரசாங்கம் பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.