டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியை வளர்த்தெடுக்க பல்வேறு தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கோவா என பல மாநிலங்களில் கட்சி கட்டமைப்பை உருவாக்கி ஆம் ஆத்மி தீவிர கள செயல்பாட்டை மேற்கொண்டு வருகிறது.குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரையை மிக தீவிரமாக இப்போதே மேற்கொண்டு வருகிறது. களத்தில் தற்போது மூன்றாவது இடத்தில் இருந்தாலும், மக்களின் வரவேற்பை பயன்படுத்தி கணிசமான வாக்குவங்கியை பெற முடிந்தால், பல இடங்களில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி களமாடிவருகிறது.
தென்மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் இருப்பு மிக சொற்பமாகவே உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பக்கம் அக்கட்சியின் கவனம் திரும்பியுள்ளது. அம்மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள பெங்களூரு உள்ளாட்சி தேர்தலில் உத்வேகத்துடன் களம் கண்டு தடம் பதிக்க ஆம் ஆத்மி இப்போது வேலையை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக பெங்களூருவில் உள்ள 243 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் தல 10,000 உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் கட்சி செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் கட்சியின் ஆதாரத்தை வலுப்படுத்தும் விதமாக கிராம் சம்பர்க் அபியான் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
அத்துடன் பெண்கள் அணி, இளைஞர்கள் அணி, ஒபிசி அணி, எஸ்சி/எஸ்டி அணி, வர்த்தகர்கள் அணி, விவசாயிகள் அணி என 10க்கும் மேற்பட்ட அமைப்புகளை உருவாக்கி மாநிலத்தில் கட்சியின் அடிப்படை கட்டுமானத்தை வலுவாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.இவர் பெங்களூரு மாநகரின் முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் களத்தில் இல்லை.. சமூக வலைதளத்தில் மட்டுமே உள்ளது - குலாம் நபி ஆசாத் பேச்சு
மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகள் இருப்பது சவாலான விஷயம் என்றாலும், அரவிந்த் கேஜ்ரிவாலின் டெல்லி மாடல் அரசை மக்களிடம் கொண்டு சேர்த்து கட்சியை வளர்த்தெடுப்போம் என பாஸ்கர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கான வெள்ளோட்டமாக வரப்போகும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை அக்கட்சி எதிர்பார்த்து உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Bengaluru, Karnataka