குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சி அமைத்தது. 182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதேவேளை, புதுமுகமாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது.
இந்த தேர்தல் குறித்து விரிவான புள்ளி விவரங்கள் தற்போது வெளியான நிலையில், கணிசமான இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி, காங்கிரசின் படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 இடங்களை மட்டுமே வென்று கடும் போட்டியில் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 80க்கும் அதிகமான இடங்களை வென்று வலுவான எதிர்க்கட்சியாக விளங்கியது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மியின் வருகையால் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது.
இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பை தந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி உயர்ந்து 53 சதவீதத்தை தொட்டுள்ளது. அதேவேளை காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி 27 சதவீதமாக சரிந்துள்ளது. புதிய வருகையான ஆம் ஆத்மி 12.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக பகுதி வாரியான புள்ளி விவரத்தை பார்க்கும்போது இந்த மாற்றம் தெளிவாக தெரிகிறது. கடந்த தேர்தலில் சவுராஷ்டிரா பகுதியில் பாஜகவுக்கு கடும் சவாலை தந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது. மொத்தம் 48 தொகுதிகள் கொண்ட சவுராஷ்டிராவில் கடந்த முறை காங்கிரஸ் 28 இடங்களை வென்றது.
ஆனால் இம்முறை நிலைமை தலைகீழாக மாறி 48இல் பாஜக 40 இடங்களை வென்றுள்ளது. அதேவேளை, புதுமுகமான ஆம் ஆத்மி 4 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறை 28 இடங்களை வென்ற காங்கிரஸ் இந்த முறை ஆம் ஆத்மியை விட மோசமாக தோல்வி கண்டு 3 இடங்களை மட்டுமே வென்றது. அதேபோல், பழங்குடி தொகுதிகளான 27 எஸ்டி தொகுதிகளில் 23 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
இதையும் படிங்க: பூதாகரமாகும் எல்லை பிரச்சனை.. கர்நாடக - மகாராஷ்டிரா முதலமைச்சர்களை சந்திக்கும் அமித் ஷா
காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது. ஆனால், இந்த 27 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இவ்வாறு, கணிசமான இடங்களில் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி அறுவடை செய்து அக்கட்சியின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, BJP, Congress, Gujarat