நாட்டின் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளருக்கு எதிராக வலுவான பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கான முதல் குரலை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பிரிவினை சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பொது வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்த மேற்கண்ட 22 கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் நேற்று மம்தா பானர்ஜி சந்திப்பு மேற்கொண்டார். சரத் பவாரை குடியரசு தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்த மம்தா விரும்பிய நிலையில், அதை சரத் பவார் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் தங்களின் பிரதிநிதிகளாக மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, இந்த கூட்டத்தை முன்னணி கட்சிகளான ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பீஜு ஜனதாதளம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புறக்கணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் வருகையால், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் எதிர் துருவத்தில் இருந்து அரசியல் செய்யும் இடதுசாரிகளும் மம்தாவின் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை. அதேவேளை, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மம்தா எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10 லட்சம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒரு மெகா பொய்யுரை - ராகுல் காந்தி விமர்சனம்
மற்றொரு முக்கிய கட்சியான ஆந்திராவை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுக்கவில்லை. இவர் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரிப்பார் எனக் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளரை வரும் 18ஆம் தேதி தேர்வு செய்யும் எனக் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, Mamata banerjee