Home /News /national /

ஆதார் அட்டை செல்லத்தக்கதா? - உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு

ஆதார் அட்டை செல்லத்தக்கதா? - உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

 • News18
 • Last Updated :
  ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசனப்படி, செல்லத்தக்கதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் எனப்படும் 12 இலக்க தனித்துவ எண்ணை வழங்கும் திட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், ஆதார் சட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டில் பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியது. எனினும், ஆதார் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  மேலும் ஆதார் அட்டை திட்டம், அரசியல் சாசனப்படி, செல்லத்தக்கதா என்பது குறித்து விசாரணை நடத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இதையடுத்து, தனிமனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையா என்பது குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

  இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அளித்த தீர்ப்பில், தனி மனித ரகசியம் என்பது வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு அங்கம் என்று தெரிவித்தனர். அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூடு, தனிமனித விவரங்களை கேட்பதில் சில வரையறைகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

  இதனைத் தொடர்ந்து, ஆதார் அட்டைக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த ஜனவரி 17-ம் தேதி தொடங்கியது. இந்த விசாரணையின்போது, அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 99 சதவீத மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தகவல்களை அளித்துள்ளதாகவும் வாதிட்டனர். ஏழை மக்களுக்கு அடையாளத்தை ஆதார் அட்டைகள் வழங்கியுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டது.

  ஆனால், குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை மத்திய தொகுப்பில் சேர்ப்பதால், அவை கசிவதற்கு வாய்ப்பு இருப்பதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட தரவுகளை பதிவுசெய்வதன் மூலம், எதிர்காலத்தில் மக்களின் நகர்வுகளை கண்காணிக்கவும், அவர்களின் பழக்கங்களை மதிப்பிட்டு, அவர்களது செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று கவலை தெரிவித்தனர்.

  குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, மக்களிடையே எதிர் கருத்துக்களை ஒடுக்கி, அரசியல் முடிவுகளை எடுப்பதில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் தரவுகளை திருட முடியாத வகையில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக தனித்துவ அடையாள ஆணையம் பதில் அளித்தது. நீதிபதிகள் அறையில் செயல் விளக்கம் அளித்த தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, பூமியில் உள்ள அதிவேக கணிப்பொறியால் கூட, ஆதார் தகவல்களை திருட முடியாது என்று உறுதியளித்தார்.

  மேலும் முறைகேடுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியுமே ஆதார் எண்களை வழங்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. நான்கரை மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கடந்த மே 10-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் அறிவிப்புக்கு நீதிபதிகள் தடைவிதித்தனர். இந்நிலையில், ஆதார் திட்டம் செல்லத்தக்கதா என்பது குறித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர். இதில், நீதிபதிகள் சிக்ரி, சந்திரசூடு, அசோக் பூஷண் ஆகியோர் மூன்றுவிதமான கருத்துக்களை வெளியிடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Aadhaar Case, Aadhaar Verdict Today, Biometric ID, SC

  அடுத்த செய்தி