இந்தியாவில் உள்ள சில பிரபலமான புத்த கோயில்கள்... விரிவான தகவல்!

மாதிரி படம்

மேலைநாடுகளில் பலரும் புத்த மதம் திபெத்தில் உருவானதென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கௌதம புத்தர் அதிகம் உலவிய பகுதிகள் இந்தியாவிலுள்ள உத்திரப் பிரதேசம், பீகார் ஆகியவைதான்

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகில் மிகவும் விரும்பப்படும் மதங்களில் ஒன்று பௌத்தம் அல்லது புத்த மதம். 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் அறிவொளியைப் பெற்று, தனது முதல் பிரசங்கத்தை வாரணாசியின் சாரநாத்திற்கு அருகே புத்த கயா என்ற இடத்தில் தான் அளித்தார். இந்தியாவின் புத்த மத தலைமையிடம் என்றால் அது புத்த கயா என்று சொல்லலாம். புத்தரின் பிரசங்கத்திற்கு பின் விரைவில், மதம் மிகவும் பிரபலமடைந்தது, அகிம்சை, உண்மை மற்றும் பற்றின்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் புத்தரின் அற்புதமான போதனைகள் உலகளாவியதாக மாறியது.

இன்றும் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில அற்புதமான கோயில்கள் புத்தரின் போதனைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, இன்று புத்தருக்கான கோயில்கள் உலகம் முழுவதும் காணப்படுகிறது, ஆனால் இந்தியாவில் இருக்கும் புத்த கோயில்கள் முற்றிலும் தனித்துவமானது. அந்தவகையில் மிகவும் பிரபலமான புத்த கோயில்களுக்கு இப்போது இந்த உள்ளடக்கத்தின் வாயிலாக ஒரு பயணத்தை தொடங்கலாம் வாருங்கள்.

மகாபோதி கோயில், புத்த கயா:

பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 96 கி.மீ தொலைவில் இருக்கும் நகரம் புத்த கயா. இங்கு இருக்கும் போதி மரத்தடியில்தான் புத்தருக்கு ஞானம் பிறந்து அவரால் புத்த மதம் தோற்றுவிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள புத்த மதத்தினருக்கு இந்த புத்த கயாவிலுள்ள மகா போதி கோயில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான புத்த மதத்தவர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பிரதான கோயிலுக்குள் அந்த மரம் இன்னும் இருக்கிறதாம். பாலி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. போதி மரத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் புல், பூண்டுகள் கூட முளைப்பதில்லை. 5 ஆம் நூற்றாண்டின் இந்த கோயில் அசோக மன்னரால் கட்டப்பட்டது. மஞ்சள் மணற்கற்களால் ஆன புத்தரின் அழகிய சிலையையும் இங்கு காணலாம்.

சாரநாத் கோயில், வாரணாசி:

புத்த யாத்ரீகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றான சாரநாத், புத்தர் தனது முதல் பிரசங்கங்களை தனது சீடர்களுக்கு வழங்கிய இடம் இங்குதான். வாரணாசியில் அமைந்துள்ள இந்த கோவிலை அசோக மன்னர் கட்டியுள்ளார். இங்கு பார்வையிட வேண்டிய சில முக்கிய இடங்கள் சவுகாந்தி ஸ்தூபம், முலகந்த குட்டி விஹார், தமேக் ஸ்தூபம், மற்றும் தர்மராஜிக ஸ்தூபம் ஆகிய இடங்களை காண கண் கோடி வேண்டும். உதாரணமாக, இந்த கோயிலின் உட்புறச் சுவரில் புத்தர் சாகும் தறுவாயில் இருப்பது சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்தச் சித்திரத்தில் அவரைச் சுற்றி அமர்ந்திருக்கும் அத்தனை பேரும் சோகமே உருவாக அமர்ந்திருக்க, ஒருவன் மட்டும் குரோதத்தோடு பார்ப்பது போல வரையப்பட்டிருக்கும். அவனைப் பார்த்து ஒரு குழந்தை மிரள்வது போலவும் வரையப்பட்டிருக்கும். அது புத்தரின் எதிரிகளை அடையாளம் காட்டும் மறைசெய்தி. இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் சிலைகள் இந்த கோயிலில் உங்களின் மனதை கவரும்.

வாட் தாய் கோயில், குஷினகர்:

இந்த கோயில், அமைதியை நாடுபவர்களுக்கு ஒரு புதையல் போன்றது.  இயற்கை எழிலுக்கு மத்தியில் தியானம் செய்ய அமைதியான இடத்தை இந்த வாட் தாய் கோயில் நமக்கு வழங்குகிறது. இந்த அழகான கோவிலில் ஒரு பிரார்த்தனை மண்டபம் உள்ளது, அங்கு ஒருவர் தியானிக்கவும் அமைதியாக ஜெபிக்கவும் முடியும். இந்த இடத்தில் ஒரு மந்திர ஆன்மீக ஒளி உள்ளது தான் அதன் சிறப்பு. புத்த மற்றும் தாய் கட்டிடக்கலைகளின் சரியான கலவையாக இந்த வாட் தாய் கோயில் காட்சியளிக்கின்றது.

சிவப்பு மைத்ரேயா கோயில், லே:

இந்த கோயில் இந்தியாவின் அட்டகாசமான இடத்தில் அமைந்துள்ளது. வானத்தைத் தொடும் மலைகள் இனிமையான நிலப்பரப்புகளுக்கு நடுவே காட்சியளிக்கும் இந்த இடம் திக்ஸி மடாலயத்தின் ஒரு பகுதியாகும், இங்கு 49 அடி உயரமுள்ள புத்தரின் சிலை புகழ் பெற்றது. உலகெங்கிலும் உள்ள புத்த யாத்ரீகர்கள் மற்றும் பயணிகள் இந்த இடத்திற்க்காகவும் அதன் அழகிற்க்காகவும் ஆன்மீக முக்கியத்துவத்துக்காகவும் பார்வையிடுகிறார்கள். 1970 ஆம் ஆண்டில் 14வது தலாய் லாமா விஜயம் செய்ததன் நினைவாக இது கட்டப்பட்டது. இது லே-மானலி நெடுஞ்சாலைக்கு இடதுபுறத்தில் 20 கி.மீ தென்கிழக்கில் தெற்கே அமைந்துள்ளது.

மஹாபரினிர்வனா கோயில், குஷினகர்:

உத்தரபிரதேசத்தின் குஷினகரில் உள்ள மஹாபரினிர்வனா கோயில் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு புனித யாத்ரீக தலமாகும். அழகிய கட்டிடக்கலை மற்றும் சிவப்பு மணற்கற்களில் செய்யப்பட்ட அற்புதமான வேலைப்பாடுகள் காரணமாக இந்த கோயில் இந்திய மற்றும் வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. புத்தரை பின்பற்றுபவர்களில் முக்கியமானவரான சுவாமி ஹரிபாலா இந்த கோவிலை இங்கு கட்டியுள்ளார்.

கோல்டன் பகோடா கோயில், அருணாச்சல பிரதேசம்:

இமயமலையின் அடிவாரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் நம்சாய் மாவட்டத்தில் உள்ள காங் மு காம் 20 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த கோல்டன் பகோடா கோயில். கோயிலின் முக்கிய ஈர்ப்பு பகோடாவில் உள்ள 12 குவிமாடங்கள் ஆகும், இது 2010ல் கட்டப்பட்டது. பர்மிய கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாக இந்த கோல்டன் பகோடா கோயில் காட்சியளிக்கிறது. பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த்தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும்பாலும் பர்மாவில் தான் காணப்படும். ஆனால் இந்த கோயில் இந்தியவைல் கட்டப்பட்டுள்ளது. இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதோடு, இரவிலும், பகலிலும் நன்கு மின்னும்.

தேரவாத புத்த கோயில், இட்டாநகர்:

இது வடகிழக்கு இந்தியாவின் மிகவும் பிரபலமான புத்த கோவில்களில் ஒன்றாகும். இந்த இடம் பக்தர்கள் மற்றும் தியான ஆர்வலர்களால் எப்போதும் நிரம்பி இருக்கும். இந்த கோயில் முற்றிலும் இயற்கையான அழகால் சூழப்பட்டுள்ளது, இங்கு தியானம் மற்றும் பிரார்த்தனை செய்வது உங்களை பரவசமடையச் செய்யும். 

Also read... ’கோழைகள், மதவெறிக்கும் வெறுப்புக்கும் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்..’ - மீண்டும் வைரலாகும் பெண் எம்.பி-யின் பேச்சு..

மேலைநாடுகளில் பலரும் புத்த மதம் திபெத்தில் உருவானதென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கௌதம புத்தர் அதிகம் உலவிய பகுதிகள் இந்தியாவிலுள்ள உத்திரப் பிரதேசம், பீகார் ஆகியவைதான். புத்தரின் காலத்துக்குப் பிறகுதான் பௌத்தம் தனி மதமாக அறியப்பட்டது. அதுவரை இந்தியாவிலுள்ள எத்தனையோ ஆன்மீக இயக்கங்களில் ஒன்றாகவே அது இருந்தது. இந்த தேசத்தில் ஆன்மீகத் தேடலை மீண்டும் தீவிரப்படுத்த புத்தர் முனைந்தார். ஏனெனில், ஒரு காலத்தில் ஆன்மீகத் தேடல் மிகுதியாக காணப்பட்ட இந்த நாடு அவர் தோன்றிய காலங்களில் சடங்குகளின் பிடியில் ஆட்பட்டிருந்தது. இந்தச் சூழலை அவர் மாற்ற முற்பட்டார். பின்னர் அவருடைய சீடர்கள், புத்தமதம் எனும் கட்டமைப்பை உருவாக்கினர். இப்படி படிப்படியாக வளர்ச்சி கண்ட புத்த மதம் இன்று பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. அவற்றில் மேற்சொன்னவை தான் பலரால் கொண்டாடப்படும் டாப் இந்திய புத்த கோயில்கள் இருக்கும் இடங்கள். உங்களால் முடிந்தால் அடுத்த ட்ரிப்பை இந்த இடங்களுக்கு செல்ல பிளான் செய்யுங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: