பொதுவாக கணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனைவிமார்கள் காவல்துறையில் வன்கொடுமை புகார் அளிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர் ஒருவர் தன்னால் மனைவியிடம் அடி வாங்க முடியவில்லை என, காவல்துறையில் புகார் அளித்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சிங். ஆசிரியரான இவர் சுமன் என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அஜித் சிங் காவல்துறையிடம் தன் மனைவி மீது புகார் அளித்துள்ளார். அதில், ஆரம்ப கால திருமண வாழ்க்கை அமைதியாக கழிந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
தனது மனைவி பாத்திரம், குச்சி, கிரிகெட் மட்டை உள்ளிட்ட பொருள்கள் மூலம் தன்னை அடிப்பதாகவும், இதற்கான ஆதாரங்களைக் கொண்ட சிசிடிவி பதிவுகளையும் அவர் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
கணவர் அஜித்தை அவரது மனைவி சுமன் தாக்குவதும், அதை அவரது மகன் பரிதாபத்துடன் பார்ப்பதுமான இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியுள்ளது. தனது மனைவிக்கு எதிராக இவர் ஒரு முறை கூட பதில் தாக்குதல் நடத்தியதில்லையாம். தான் ஒரு ஆசிரியர் என்பதாலும், தனது மகனின் எதிர்காலம் கருதியும் இவ்வளவு காலம் கண்ணியத்துடன் பொறுமை காத்து வந்ததாக சொல்கிறார் கணவர் அஜித் சிங். ஆனால், சமீப காலமாக மனைவி எல்லை மீறி செல்வதாகவும் தாக்குதல் காரணமாக தனக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் மங்கிபாக்ஸ் பரவலால் ஆபத்தா - நிபுணர்கள் கூறுவது என்ன?
தனக்கு நீதிமன்றம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறிய அவர், மனைவிக்கு தேவையான மனநல ஆலோசனை வழங்கவும் கோரியுள்ளார். இதையடுத்து புகாரை விசாரிக்கவும் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மனைவி அவரது சகோதரரின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்து கொள்கிறார் என கணவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.