பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அவமானப் படுத்தப்பட்ட மாணவி? - தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அவமானப் படுத்தப்பட்ட மாணவி? - தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்

ஹைதராபாத் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கட்டணம் செலுத்தாததால் நிர்வாகத்தினரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கொரோனா தொடர்பான ஊரடங்கால் கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து, மாணவர்களின் கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக பல கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் வழியாக வகுப்புகளைத் தொடங்கின. தற்போது பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கட்டணம் செலுத்தாததால் நிர்வாகத்தினரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் பெற்றோர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில்,  “நாங்கள் பள்ளிக்கு செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியினை செலுத்திவிட்டோம். மீதமுள்ள தொகையை இந்த மாத இறுதிக்குள் பள்ளிக்கு செலுத்துவதாக தெரிவித்திருந்தோம். கொரோனா தொடர்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாங்கள் எங்களது வருவாயை இழந்தோம். எனினும், பள்ளிக்கு சுமார் 15,000 ரூபாயை கட்டணமாக செலுத்தினோம். ஆனால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து எனது மகளுக்கு பள்ளிக் கட்டணத்தை செலுத்த அழுத்தம் கொடுத்து அவமானப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தந்தை தினசரி கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர்கள் பேசும்போது, “கடந்த சில நாள்களில் மட்டும் இரண்டு மூன்று முறை என்னை பள்ளிக்கு அழைத்தனர். என்னுடைய மகள் பள்ளி நிர்வாகத்தினரை எதிர்கொள்ள விரும்பாததால் நேற்று பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக ஆசிரியரிடம் அவள் தெரிவிக்கக் கூறினாள். பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தார். என்னுடைய மகள் எந்தவகையில் அவமானப்படுத்தப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால், என் மகள் தற்கொலை செய்து கொண்டாள்” என்று அழுதபடி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க... ஹைதராபாத்தில் மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது

 

பள்ளிக் கட்டணம் முழுமையாக செலுத்தாததால் சிறுமியை நிர்வாகத்தினர் வகுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய அதிகாரிகள், “மாணவி தற்கொலை செய்துகொண்டதில் பள்ளியின் தொடர்பு இருக்கிறதா என்பதை பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

 

------------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Ram Sankar
First published: