பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிப்பதற்காக இந்தியா கொடுத்த அழுத்தம் மற்றும் திரை மறைவு நடவடிக்கைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2019ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானை ஒட்டிய பாலகோட் எனும் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத முகாம்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை.
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டது. இரு நாட்டு விமானப்படையினரும் துரத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் செலுத்திய மிக் 21 பைசன் ஜெட் விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு சொந்தமான F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதே நேரத்தில் அபிநந்தன் பயணித்த விமானமும் பாகிஸ்தான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் ரத்த காயங்களுடன் அவரை மீட்டு செல்லும் வகையிலான வீடியோவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (பிப் 27) தான் வெளியிட்டது. அந்த வீடியோக்கள் வெளியான உடனே மத்திய அரசு அவரை விடுவிப்பதற்கான அழுத்தங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தது.
இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி உளவுத்துறை அமைப்பான RAW-ன் தலைவர் அனில் தஸ்மனாவை தொடர்பு கொண்டு, ‘அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும், அவருக்கு எந்த ஒரு காயமும் ஏற்பட்டுவிடக்கூடாது. மீறினால் இந்தியா எதற்கும் அஞ்சாது, என்ன செய்யவும் தயங்காது. இந்தியாவின் ஆயுதங்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கானது அல்ல’ என பாகிஸ்தானுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியுடன் தெரிவிக்குமாறு கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது. தனது நிலைப்பாட்டின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் எல்லையில் பிரித்வி ஏவுகனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இது அமெரிக்காவுக்கு தெரியவந்தது.
RAW-ன் தலைவர் அனில் தஸ்மனா ISI தலைவர் Lt Gen Shah-வை ரகசிய ஹாட்லைன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தகவல்களை தெரியப்படுத்தியிருக்கிறார். இதன் வெளிப்பாடாகவே பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை பாகிஸ்தான் பாதுகாப்பாக விடுவிக்கும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பிப் 28ம் தேதியன்று அறிவித்தார். அதற்கு முன்னதாகவே ரகசியமாக அபிநந்தனின் விடுவிப்பு குறித்து கடிதத்தை பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்ந்நிலையில் மார்ச் 1ம் தேதி அபிநந்தனை வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Abhinandan, Pakistans isi Chief