காதலியை சுட்டுக்கொன்ற போலீஸ் எஸ்.ஐ; தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை...!

காதலியை சுட்டுக்கொன்ற போலீஸ் எஸ்.ஐ; தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை...!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: February 10, 2020, 1:01 PM IST
  • Share this:
உயிருக்கு உயிராகத் தான் காதலித்த காதலியை சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆய்வாளர், தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 26 வயதான பிரீத்தி மற்றும் தீபன்ஷு ரதி பிரீத்தியும், தீபன்ஷுவும் டெல்லி காவல்துறையில் பணி நியமனம் பெற்று, பயிற்சியில் இருந்தபோது சந்தித்து காதலிக்கத் தொடங்கினர்.

கடந்த 2018-ம் ஆண்டு பயிற்சியை முடித்த பிரீத்திக்கு, பட்பர்கஞ்ச் தொழிலகப் பகுதியிலும், தீபன்ஷுவுக்கு, பஜன்புரா காவல்நிலையத்திலும் காவல் உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் கிடைத்தது


இந்த நிலையில், பிரீத்தியைத் திருமணம் செய்வது தொடர்பாக தனது தந்தையுடன் பிரீத்தியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் தீபன்ஷு. ஆனால் பிரீத்தியின் தந்தையோ மகளின் காதல் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்; இதனால் காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினர்

கடந்த 3 மாதங்களாக பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், பிரீத்தியின் நடமாட்டத்தை தீபன்ஷு கண்காணித்து வந்தார். கடந்த 7-ம் தேதி பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்திருந்த தீபன்ஷு, பிரீத்தி வழக்கமாக வந்து செல்லும் டெல்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியே காத்திருந்தார்

அன்று இரவு 8.30 மணிக்கு காவல்நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரீத்தி, 9.30 மணிக்கு ரயில் நிலையம் வந்திறங்கி வெளியில் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து 50 அடி துாரம் வெளியில் அவர் நடந்து சென்ற நிலையில், பின்னால் வந்த தீபன்ஷு திடீரென பிரீத்தியின் தலையில் தனது துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டார்.ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரீத்தி அங்கேயே உயிரிழந்தார்; சத்தம் கேட்டு, அங்கிருந்த ஒரு நபர் ஓடிவர, தீபன்ஷு காரில் ஏறி தப்பித்துச் சென்றார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடம் விரைந்து சடலத்தை மீட்டு தடயங்களை சேகரித்தனர்.

உடனடியாக, தீபன்ஷுவின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது கார் டெல்லியில் இருந்து வடக்கு நோக்கி ஹரியானா மாநிலத்திற்குள் சென்றது தெரியவந்தது.

போலீசார் தேடிச் சென்றபோது, ஹரியானா மாநிலம் கர்நால் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த காரில் தீபன்ஷு சடலமாகக் கிடந்தார். காருக்குள் இருந்தபடி தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் தீபன்ஷு என்பது விசாரணையில் தெரியவந்தது.

கல்வியில் சிறந்து விளங்கிய பிரீத்தி, தனது காவல் பணியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஆர்வத்துடன் விசாரணை நடத்தி வந்தார் என்கின்றனர் அவரது தோழிகள்.

மேலும், தீபன்ஷு தன்னைத் துரத்திக் கொண்டு வருவதாகவும் தோழிகளிடம் அவர் தெரிவித்துள்ளார் என்கின்றனர் போலீசார். கொலை மற்றும் சந்தேக மரணம் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Also see...
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்