ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் - பாராட்டுக்களை பெரும் தொழிலதிபரின் மனிதநேயம்!

ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் - பாராட்டுக்களை பெரும் தொழிலதிபரின் மனிதநேயம்!

காட்சிப் படம்

உத்தரப்பிரதேசத்தில் ஒரு ரூபாய் விலையில் தொழிலதிபர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பிக் கொடுத்து வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தலைநகர் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களைக் காட்டிலும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் இடம் கிடைக்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. புதிய நோயாளிகளை அனுமதிக்க இடவசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கும் உயிர்க்காக்கும் ஆக்சிஜனை கொடுக்க முடியாத சூழல் உள்ளது. மிக குறைவான அளவில் மட்டுமே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பதால் அனைத்து நோயாளிகளுக்கும் போதிய அளவில் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர், குழந்தைகள், மகன், தாய், தந்தை என மருத்துவமனை வாசல்களிலும், சாலைகளிலும் தங்களின் நேசத்துக்குரியவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் அன்றாடம் இறக்கும் மிக கொடுமையான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் இறந்தவர்களை எரியூட்டுதற்கு கூட போதிய வசதிகள் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்சிஜனைப் பெற்று தங்களின் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்ற போராடி வரும் இந்த சூழலை பயன்படுத்தி டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற நகரங்களில் பலர் கள்ள மார்க்கெட்டுகளில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்ப 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மிகப்பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் தருவாயில், ஆங்காங்கே மனிதநேயமிக்க ஒரு சிலர் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜனுக்காக அலையும் மக்களுக்கு ஒரு ரூபாய் விலையில், அதனை தொழிலதிபர் ஒருவர் நிரப்பிக் கொடுத்து வருகிறார்.

ஹமிர்பூர் மாவட்டத்தில் ரிம்ஜிம் இஸ்பாட்(Rimjhim Ispat Factory) என்ற பாட்டிலிங் தொழிற்சாலை வைத்திருக்கும் மனோஜ் குப்தா என்பவர், நாள்தோறும் ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுத்து உதவி வருகிறார். இதனையறிந்த ஜான்சி, பன்டா, லலித்பூர், கான்பூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அவரது தொழிற்சாலையை நோக்கி சென்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதித்ததற்கான பி.சி.ஆர் ரிசல்ட், மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் மற்றும் ஆதார் கார்டுகளை கொண்டு சென்றால் ஒரு ரூபாயில் ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக்கொள்ளலாம். இது குறித்து பேசிய குப்தா, கடந்த ஆண்டு தனக்கும் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறுகிறார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனக்கும் ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டதாகவும், அதனை மனதில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்துவருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதேபோல், மும்பையில் ஆக்சிஜன் மேன் என அழைக்கப்படும் ஷாநவாஸ், இரவு பகல் பாராமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்த்து வருகிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: