பேசுவதை நிறுத்தியதால் பெண்ணின் மீது ஆசிட்டை வீசிய இளைஞர்!

மாதிரிப் படம்

முதற்கட்ட விசாரணையின்படி, பாதிப்படைந்த பெண்ணும் குற்றம்சாட்டப்பட்ட நபரும் ஆரம்பகாலத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர்.

 • Share this:
  உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் அவர் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹப்பூர் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் பாதிப்படைந்த அந்த பெண் வசித்து வருகிறார். நேற்று இரவு அவரது வீட்டிற்குள் புகுந்து இளைஞர் வீட்டில் இருந்த பெண்ணின் மீது ஆசிட் வீசியுள்ளார். இதனால், அந்தப் பெண் அதிகளவு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீரட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், அந்த பெண்னின் தந்தை இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்த பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி நீரஜ், ”இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் உடனடியாக அருகில் இருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டார். தற்போது, ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

  குற்றவாளியை கைது செய்த பின்னர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”`முதற்கட்ட விசாரணையின்படி, பாதிப்படைந்த பெண்ணும் குற்றம்சாட்டப்பட்ட நபரும் ஆரம்பகாலத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர், அந்த பெண் குற்றம் சாட்டப்பட்டவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் அந்தப் பெண்ணின் மீது ஆசிட்டை வீசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
  Published by:Ram Sankar
  First published: