இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்கு கடிவாளம் போடத்தக்க வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில், 3 பேர் கொண்ட குறைதீர்ப்பு மேல்முறையீட்டு குழுக்களை அமைத்தது.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய அடிப்படையிலான தளங்களுக்கு எதிரான பயன்பாட்டாளர்களின் புகார்களை இந்த குறை தீர்ப்பு மேல்முறையீட்டு குழுக்கள் கவனித்து நடவடிக்கை எடுக்கும். இந்த குழுக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கமிட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு தலைவரையும், வெவ்வேறு அரசு நிறுவனங்களிலிருந்தும், ஓய்வு பெற்ற அதிகாரிகளில் இருந்தும் 2 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
முதல் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி தலைவராக இருப்பார். இதன் முழு நேர உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அசுதோஷ் சுக்லா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளரும், முதன்மை தகவல் அதிகாரியுமான சுனில் சோனி இருப்பார்கள்.
இரண்டாவது குழுவுக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கொள்கை மற்றும் நிர்வாக பிரிவின் இணைச்செயலாளர் இருப்பார். இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி சுனில் குமார் குப்தா, 'எல் அண்ட் டி இன்போடெக்' நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் கவிந்திர சர்மா இருப்பார்கள்.
மூன்றாவது குழுவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி கவிதா பாட்டியா தலைவராக இருப்பார். இந்திய ரெயில்வேயின் முன்னாள் போக்குவரத்து பணிகள் அதிகாரி சஞ்சய் கோயல், ஐ.டி.பி.ஐ. இன்டெக் கிருஷ்ணகிரி முன்னாள் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான ரகோத்தமராவ் இருப்பார்கள்.
இந்த தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "தொழில்நுட்ப விதிகள் பின்பற்றப்படாவிட்டால், இந்த சமூக ஊடக தளங்கள் அனுபவிக்கும் பாதுகாப்புக்கு பிரச்னை வரும்" என எச்சரித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Social media