இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள்கள் முதல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் நிலைமையும் சமூகத்தின் பார்வைக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனை வசதிகள். படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் என பல்வேறு பிரச்னைகள் மருத்துவமனைகளைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தன. கொரோனா பணி தொடர்பாக மருத்துவத்துறை எவ்வளவு பாராட்டைச் சந்தித்ததோ அதே அளவு விமர்சனங்களையும் எதிர்கொண்டது. கொரோனா தொடர்பான பிரச்னைகளே மருத்துவமனைகளில் இன்னும் ஓயாத நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனையில் தெரு நாய் ஒன்று மருத்துவமனையில் உள்ள படுக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டில் உள்ள படுக்கையில் இந்த நாய் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோ வெளியான பின்னர் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த அதிகாரிகள், வார்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் சம்பவம் நடந்த நேரத்தில் அறை காலியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் பேசும்போது, ``தெரு நாய்கள் மருத்துவமனை வளாகங்களில் சுற்றித்திரிவது ஆச்சரியமான விஷயம் இல்லை. மருத்துவமனைக் கட்டடங்களைச் சுற்றி எப்போதும் தெருநாய்கள் இருக்கும். நிர்வாகத்தின் தூய்மையின்மை மற்றும் அக்கறையின்மையை அனைவரும் கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் கேப்ஷனில், ``உ.பியின் மொராதாபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையி பெண் அறுவை சிகிச்சை வார்டில் இருந்து காட்சி.. சமீபத்தில் சம்பல் பகுதியில் உள்ள மாவட்ட மருத்துமனையில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தில் இருந்த ரத்தத்தை நாய் நக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேச சுகாதாரத்துறையின் மோசமான நிலையை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அதிகாரிகளின் அலட்சியமே இவற்றுக்கு காரணம் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.