• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ரூ.1 கோடி நன்கொடை

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ரூ.1 கோடி நன்கொடை

குகையில் வசித்து வரும் சாமியார், இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிதியை திரட்டும் பணிகள் ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடத்தி, கோயில் கட்டுமானப் பணிகளை வரும் 2024ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் ராமர் கோயிலுக்கு நன்கொடைகளை அளித்துவருகின்றனர். ஆனால் 83 வயதான குகை சாமியார் ஒருவரின் செயல் நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ் (Swami Shankar Das). அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார். 

அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் RSS நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். குகையில் வசித்து வரும் சாமியார், இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குகை சாமியார் சுவாமி சங்கர் தாஸ் கூறுகையில், "நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குகையில் வசித்து வருகிறேன். என்னை காண வருகை தரும் பக்தர்களிடமிருந்து வரும் நன்கொடைகளில் நான் வாழ்கிறேன். VHP யின் பிரச்சாரத்தைப் பற்றி அறிந்ததும், ராமர் கோயிலுக்கான எனது சேமிப்பு தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். இந்த கோயிலுக்கு தான் நாம் அனைவரும் நீண்ட காலமாக கனவு காண்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

உத்தரகண்டில் VHPயின் ராம் மந்திர் நன்கொடை பிரச்சாரத்தின் பொறுப்பாளர் ரன்தீப் போக்ரியா, சாமியாரின் செயலைப் பாராட்டியதோடு, "நன்கொடைகளை சேகரிப்பதை விட, தாஸ் போன்ற ராம் பக்தர்களிடையே நல்லிணக்கத்தையும் சேவையையும் ஏற்படுத்துவதே பிரச்சாரத்தின் நோக்கம்" என்றார். நாங்கள் இதுவரை ₹ 5 கோடி மதிப்புள்ள நன்கொடைகளை சேகரித்திருக்கிறோம், இது எங்கள் மனதில் இருந்த இலக்கில் இருந்து மூன்று மடங்கு ஆகும். இருப்பினும், இது சேகரிக்கப்பட்ட தொகையைப் பற்றியது அல்ல. ஆனால், அயோத்தியில் ராமரின் ஆலயத்தைக் கட்டியெழுப்ப உதவுவதற்காக ராமர் மீதுள்ள பக்தியின் மூலம் முன்வருபவர்களின் எண்ணிக்கைப் பற்றியது” என்று போக்ரியா கூறினார். 

ராமர் கோயிலுக்கு நன்கொடைகளை சேகரிக்கும் பிரச்சாரத்தின் கீழ் உத்தரகண்ட்டில் 14,526 கிராமங்கள் மற்றும் 73 நகரங்களில் உள்ள 24 லட்சம் குடும்பங்களை பார்க்கவுள்ளதாக VHP முன்பு கூறியிருந்தது. பிரச்சாரத்தில் சேகரிக்கப்பட வேண்டிய நன்கொடைகளை கவனிக்க இந்து அமைப்பு பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. மேலும் "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தன்னார்வ பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 230 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது,’’ என்று ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தகவல் அளித்துள்ளார். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஐந்து லட்ச ரூபாயை வழங்கினார். அதேபோல நிதி திரட்டுவதற்கான பிரச்சார இயக்கத்தில் தற்போது நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்துள்ளார்.  ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் கணக்கில் நிதி சேர்ந்துளளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிழக்கு டெல்லி BJP MPயும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், ராமர் கோயில் கட்டுமானபணிக்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.  

நைனிடாலில் உள்ள 10 வயது சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பிலிருந்து கோயிலுக்கு, ₹2,500 நன்கொடை அளித்தார். உத்திர பிரதேசத்தின், ரே பரேலி மாவட்டம் தேஸ்காவோன் தொகுதி முன்னாள் MLA சுரேந்திர பகதூர் சிங் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1,11,11,111 தொகைக்கான காசோலையை விஷ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலருமான சம்பத் ராயிடம் டெல்லியில் நேற்று முன்தினம் வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: