இந்தியாவில் தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கை 5 விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வாரம் வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஆண் பெண் பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் சார்ந்த கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.
இதில், கணவர் பாலியல் உறவுக்கு அழைக்கும் போது மனைவி மறுப்பு தெரிவிக்க சுதந்திரம் உள்ளதா என்ற கேள்விக்கு 82 சதவீதம் மனைவிகள் ஆம் சுதந்திரம் உள்ளது என பதில் அளித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவாவைச் சேர்ந்த பெண்கள் 92 சதவீதம் ஆம் என்றும், குறைந்தபட்சமாக அருணாசல பிரதேச பெண்கள் 63 சதவீதம் பேர் ஆம் என்றும் கூறியுள்ளனர்.
இந்தியாவில் திருமணமானவர்களை தங்கள் இணையிடம் பாலியல் வன்கொடுமை (Marital Rape)புரிந்தால் அது குற்றமல்ல என இபிகோ பிரிவில் விதிவிலக்கு உள்ளது. இதன் காரணமாக கணவர் கட்டாய பாலியல் வன்புணர்வு செய்யும் போது மனைவி அதை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்து வந்த நிலையில், அண்மை காலத்தில் இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பெண்கள் பாலியல் உறவுக்கு மறுக்கும் போது அதற்கு ஆண் கோபத்தை வெளிப்படுத்துவது, அந்த பெண்ணுக்கு பொருளாதார உதவி வழங்க மறுப்பது, அவர்கள் மீது வன்முறையை ஏவுவது, அல்லது வேறு பெண்ணிடம் உறவு கொள்வது போன்ற நான்கு நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை ஏற்பீர்களா என மனைவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு 72 சதவீத பெண்கள் மேற்கண்ட நான்கில் எதையும் ஏற்க மாட்டோம் என பதில் அளித்துள்ளனர்.
15-49 வயது கொண்ட திருமணம் ஆன பெண்களில் 32 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். அதேவேளை இதே வயதில் திருமணமான ஆண்களில் 98 சதவீதம் பேர் வேலைக்கு செல்கின்றனர். வருவாய் ஈட்டும் பெண்களில் 85 சதவீதத்தினர் தங்கள் வருவாயை தங்கள் முடிவுக்கு ஏற்ப செலவு செய்யும் சுதந்திரம் 18 சதவீத பெண்களுக்கு மட்டுமே உள்ளது.
இதையும் படிங்க:
தாஜ்மஹால் சிவாலயமாக இருந்தது: 20 அறைகளை திறக்க உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மனு
மேலும், திருமணம் ஆன 42 சதவீத பெண்கள் சந்தைகள், மருத்துவமனைகள் அல்லது வேறு பொது வெளிக்கு தனியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.