இந்தியா வருவது மிகப்பெரிய கவுரவம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பை வரவேற்க, குஜராத்தில் ட்ரம்ப் தங்கியிருக்கும் 3 மணி நேரத்திற்கு அம்மாநில அரசு 100 கோடி ரூபாய் செலவிடும் என தகவல்களை வெளியாகியுள்ளன.
ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் இன்றும் நாளையும் இந்தியாவில் இருப்பார்கள். அகமதாபாத் நகரில் மோடேரா பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை அவர்கள் தொடங்கி வைக்கின்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த "ஹௌடி மோடி" நிகழ்ச்சிக்கு நடந்த ஏற்பாடுகளைப் போல அகமதாபாத்தில் "கேம் ச்சோ ட்ரம்ப்" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அஹமதாபாத்தில் அதிபர் ட்ரம்ப் தங்கியிருக்கும் 3 மணி நேரத்திற்கு 100 கோடி ரூபாய் செலவிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் ட்ரம்ப் பயணப்படும் சாலைகளை புதிதாக அமைக்கவும், செப்பணிடவும் 80 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பாதுகாப்பிற்கு 12 முதல் 15 கோடி ரூபாயும், மேட்டெரா மைதானத்திற்கு வருபவர்களின் போக்குவரத்துச் செலவுகளுக்கு 7 முதல் 10 கோடி ரூபாய் செலவாகும். அகமதாபாத் நகரத்தை அழகுப்படுத்தவும் பூச்செடிகளை நடவு செய்யவும் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மோடியும் ட்ரம்ப்பும் பயணிக்கும் சாலையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 4 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அகமதாபாத் இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் என்னும் குடிசைப் பகுதியை மறைத்து சுவர் எழுப்பும் பணிகள் நடைபெறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், இந்த பணிகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அதிகம் ஃபாலோவர்களைக் கொண்ட அரசியல் தலைவர்களுள் தான் முதலிடத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2ஆம் இடத்திலும் உள்ளதாக மார்க் ஜூக்கர்பர்க் கூறியதை அண்மையில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தான் இந்தியா செல்ல உள்ளதாகவும், மோடியுடனான சந்திப்பிற்கு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
"மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு" இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை அளிக்கும் என்று டிரம்புக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
இந்த இந்தியப் பயணம் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்காவில் குஜராத்திலிருந்து சென்றவர்களே அதிகம் இருக்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.