தட்டுக்களை தட்டுதல், தீபமேற்றுதல்: கொரோனா முன்னணி வீரர்களுக்கான மரியாதையை மீண்டும் பெருமையுடன் நினைவூட்டிய பிரதமர் மோடி

தட்டுக்களை தட்டுதல், தீபமேற்றுதல்: கொரோனா முன்னணி வீரர்களுக்கான மரியாதையை மீண்டும் பெருமையுடன் நினைவூட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மனதின் குரல் 75வது பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வான்லி உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா முன்னணி வீரர்களுக்கு செலுத்திய மரியாதையை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார்.

 • Share this:
  மனதின் குரல் 75வது பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வான்லி உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா முன்னணி வீரர்களுக்கு செலுத்திய மரியாதையை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார்.

  இது தொடர்பாக மன் கி பாத்தில் அவர் பேசியதாவது:

  கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேசத்தில் முதன்முறையாக மக்கள் ஊரடங்கு என்ற சொல்லாட்சியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த மகத்தான தேசத்தின் மகத்தான மக்களின் மகாசக்தியின் அனுபவத்தைப் பாருங்கள். மக்கள் ஊரடங்கு உலகனைத்தையும் ஓர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒழுங்குமுறையின் அபூர்வமான எடுத்துக்காட்டாக அது இருந்தது.

  இனிவரும் தலைமுறையினருக்கு, இந்த ஒரு விஷயமே கூட பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதைப் போலவே நமது கொரோனா முன்னணி வீரர்களுக்கு மரியாதை, கௌரவம், தட்டுக்களைத் தட்டுதல், தீபமேற்றுதல் போன்றவையும். கொரோனாவுக்கு எதிரான போரின் முன்னணி வீரர்கள் இதயங்களை இது எந்த அளவுக்குத் தொட்டிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இவற்றின் காரணமாகத் தான் ஆண்டு முழுவதும் அவர்கள் களைக்காமல், சளைக்காமல், தடைப்படாமல், விடாமுயற்சியோடு போராடி வந்தார்கள். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுடைய உயிரைக் காக்க, முழுமூச்சோடு போராடினார்கள்.

  கடந்த ஆண்டு இதே வேளையில் வினா என்னவாக இருந்தது – கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது வரும் என்பதே அது. நண்பர்களே, இன்று பாரதம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை களத்தில் செயல்படுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம். தடுப்பூசித் திட்டம் தொடர்பான படங்கள் குறித்து புபனேஷ்வரைச் சேர்ந்த புஷ்பா ஷுக்லா அவர்கள் எனக்கு எழுதியிருக்கிறார்.

  வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள எத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறித்து நான் மனதின் குரலில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நண்பர்களே, தேசத்தின் மூலைமுடுக்கெங்கிலிருந்தும் நாம் கேள்விப்படும் செய்திகள், காணும் படங்கள் எல்லாம் நம் இதயத்தைத் தொடும் வகையில் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தின் ஜௌன்புரைச் சேந்த 109 வயது நிரம்பிய முதிய தாயான ராம் துலையா அவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

  இவரைப் போலவே, தில்லியைச் சார்ந்த 107 வயது நிரம்பிய கேவல் கிருஷ்ணா அவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். ஹைதராபாதைச் சேர்ந்த 100 வயதான ஜெய் சௌத்ரி அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அனைவரும் தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களிடம் கோரிக்கையையும் விடுத்திருக்கிறார். தங்கள் வீடுகளில் இருக்கும் மூத்தோருக்குத் தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களின் புகைப்படங்களை எப்படி ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மக்கள் தரவேற்றம் செய்கிறார்கள் என்பதை என்னால் காண முடிகிறது.

  கேரளத்தைச் சேர்ந்த இளைஞரான ஆனந்தன் நாயர் இதற்கு, vaccine seva, தடுப்பூசி சேவை என்ற ஒரு புதிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இதே போன்ற செய்தியை, தில்லியைச் சேர்ந்த ஷிவானி, ஹிமாச்சலைச் சேர்ந்த ஹிமான்ஷு ஆகிய மேலும் பல இளைஞர்களும் அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களுக்காக நான் நேயர்களான உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவையனைத்திற்கும் இடையே, மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை, என்ற கொரோனாவுக்கு எதிரான போரின் மந்திரத்தை மறந்து விடாதீர்கள். நான் சொல்ல மட்டும் வேண்டும் என்பதல்ல. நாம் வாழவும் வேண்டும், பேசவும் வேண்டும், கூறவும் வேண்டும், மருந்தும் தேவை எச்சரிக்கையும் தேவை என்ற மந்திரத்தை மக்கள் மத்தியில் பரவச் செய்ய வேண்டும்.

  என்று கூறினார் பிரதமர் மோடி.
  Published by:Muthukumar
  First published: