பாஜக-வின் கோட்டையான மத்திய பிரதேசம் மற்றும் காங்கிரஸின் கோட்டையான மிசோரம் ஆகிய இரு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 74.61 சதவீத வாக்குகளும், மிசோரமில் 73 சதவீத வாக்குகளும் பதிவாயின.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களில் சத்தீஸ்கரில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் மத்திய பிரதேசத்திலும், மிசோரமிலும் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக-விடமிருந்து ஆட்சியைப் பறிக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் 1990 முதல் வென்று வரும் புத்னி தொகுதியில் அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் போட்டியிட்டார்.
காங்கிரசின் முக்கிய தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை. இங்கு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் 250-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது தெரிந்தது. அவற்றை மாற்ற வேண்டுமென கமல்நாத்தும், சிந்தியாவும் புகார் கூறினர்.
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்யவே, கோளாறான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இதனிடையே, 2 தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்தியப் பிரதேசத்தில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான மிசோரமில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வடகிழக்குப் பிராந்தியத்தில் காங்கிரஸ் வசம் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் அதை தக்க வைக்க முதல்வர் லால் தனாவ்லா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
பாஜகவோ, பொதுச் செயலாளர் ராம் மாதவை களமிறக்கி, தீவிரமாக பணியாற்றியது. பாஜக அணியில் இருந்து விலகிய வலுவான மிசோ தேசிய முன்னணி கட்சியும் களத்தில் உள்ளது. இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகின்றன.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election, Madhya pradesh, Mizoram