கர்நாடகா : வெடித்து சிதறிய ஜெலட்டின் லாரி... பெரும் உயிர்சேதம்... நடந்தது என்ன?

கர்நாடகா : வெடித்து சிதறிய ஜெலட்டின் லாரி... பெரும் உயிர்சேதம்... நடந்தது என்ன?

சிவமோகா

இந்த பயங்கர வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து, சுற்றுவட்டாரத்தில் 500 மீட்டர் பரப்பளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் ஜெலட்டின் ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில், வடமாநில தொழிலாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சிவமோகா மாவட்டம் ஹூனசோடு கிராமத்தில் ரயில் தண்டவாளங்களுக்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்றிரவு 10.30 மணியளவில் அந்த குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் ஏற்றி வந்த லாரி திடீரென வெடித்துச் சிதறியது. இதில், லாரியில் பயணித்த பீகார் மாநில தொழிலாளர்கள் பலர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  இந்த பயங்கர வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து, சுற்றுவட்டாரத்தில் 500 மீட்டர் பரப்பளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சிவமோகா மட்டுமின்றி, அண்டை மாவட்டமான சிக்மங்களூர், தேவாங்கிரி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  நில அதிர்வு அச்சத்தால் பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்ததோடு சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளன.

  வெடிவிபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, மீட்பு பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய பெங்களூரு மற்றும் மங்களூருவில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. கல் குவாரி உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  வெடிவிபத்து குறித்து உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

  வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  Published by:Ram Sankar
  First published: