ஆயிரக்கணக்கில் கடன் வாங்கினால் லட்சங்களில் பணத்தை திரும்ப வசூலிக்கின்றனர். அதோடு மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் படங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் வசூலித்து வரும் கும்பல் குறித்து நூற்றுக்கணக்கான வழக்குகள் டெல்லி காவல் துறைக்கு வந்துள்ளது.
அதிக வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாகவும், வட்டியுடன் பணம் முழுவதுமாக வசூலித்த பிறகும் நிர்வாணபாக புகைப்படங்களை மார்பிங் செய்து அதன்மூலம் மக்களை மிரட்டி அதிக அளவில் பணம் பறிப்பதாகவும் ஒரு கும்பல் மீது புகார் வந்தது.
டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் மூலோபாய நடவடிக்கை (IFSO) இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்ற 100 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்தது.
விசாரணை தொடங்கி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண். பெண் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெரிய நெட்வொர்க் வைத்து இயக்கியுள்ள இந்த கும்பளுக்கு சீன நாட்டினரின் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
5000 , 10000 என கடன் கேட்டு வருபவர்களுக்கு ஒரு சில செயலிகளை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்து தரவுகளை ஆக்ஸஸ் செய்யும் அனுமதி அளிக்கச் சொல்லி இருக்கிறார்கள். அதன் மூலம் அந்த கடன் வாங்கும் நபர்களின் தனியுரிமைகளையும் தரவுகளையும் சீன நாட்டில் இருக்கும் மக்களுக்கு விற்றுள்ளனர்.
அதிக வட்டியுடன் கடன் தொகை முழுவதும் திருப்பித் தரப்பட்டாலும் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் படங்களை அனுப்பி இதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவோம் என்று போலியான ஒரு தளம் மூலம் மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்து மக்களும் லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பியுள்ளனர்.
அதேபோல் போலி ஐடி கொடுத்து பெறப்பட்ட நூற்றுக்கணக்கான எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்தப் பணம் முழுவதும் ஹவாலா முறையிலும் , கிரிப்டோகரன்சியாகவும் மாற்றப்பட்டு சீன நாட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுவரை, சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் சீன நாட்டவர்கள் இந்த முறையில் மோசடி செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
இந்தியாவில் பிடிபட்ட 22 பேரின் தரவுகள், தொலைபேசி தொடர்புகள் மூலம் சீனாவில் உள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.