Home /News /national /

பயங்கர வேகத்தில் பக்தர்கள் மீது மோதிய கார்.. அதிர்ச்சி வீடியோ..

பயங்கர வேகத்தில் பக்தர்கள் மீது மோதிய கார்.. அதிர்ச்சி வீடியோ..

கார் மோதல்

கார் மோதல்

நிகழ்விடத்தில் இருந்தவர்கள் வேகமாக வந்து பக்தர்கள் மீது மோதிய காரில் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்தனர். மேலும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் அந்த காருக்கு தீ வைத்தனர்

துர்க்கை அம்மன் சிலைகளை கரைப்பதற்காக ஆற்றுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த எஸ்.யூ.வி கார் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மவட்டத்தில் பதால்கோன் எனும் பகுதியில் விஜயதசமி திருநாளான இன்று, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த துர்க்கை அம்மன் சிலைகளை கரைப்பதற்காக பந்தல்களில் இருந்த சிலைகளை எடுத்து ஆற்றுக்கு பக்தர்கள் திரளாக எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

இன்று மதியம் 1.30 மணியளவில் சிலைகளை எடுத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த எஸ்.யூ.வி கார் ஒன்று அவர்களை பின்னால் இருந்து மோதியது. வேகமாக வந்த கார் மோதியதில் பக்தர்கள் தூக்கி எறியப்பட்டனர். பலருக்கு காயம் ஏற்பட்டது.



பலத்த காயம் அடைந்த பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குறைந்தது 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.

Also Read: விவசாயிகள் போராட்ட களத்தில் சிதைக்கப்பட்ட உடல்.. கொடூரமான கொலை.. வைரல் வீடியோ

இதனிடையே நிகழ்விடத்தில் இருந்தவர்கள் வேகமாக வந்து பக்தர்கள் மீது மோதிய காரில் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்தனர். மேலும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் அந்த காருக்கு தீ வைத்தனர். மேலும் அந்த காரில் கஞ்சா இருந்ததாகவும், மோதியவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டனரோ எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

சில நாட்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்புர் கேரி எனும் பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மகன் பயணம் செய்ததாக கூறப்படும் கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். காரில் இருந்த 4 பேரை அங்கிருந்தவர்கள் அடித்தே கொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது அதே போல மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read:  17,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்கும் விப்ரோ நிறுவனம்!

ஜாஷ்பூர் மாவட்ட எஸ்.பி இது குறித்து கூறுகையில், காரை மோதி விபத்தை ஏற்படுத்திய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Published by:Arun
First published:

Tags: Accident, Chattisgarh, Lakhimpur S03p14

அடுத்த செய்தி