ஹோம் /நியூஸ் /இந்தியா /

பக்கென தீப்பற்றி எரிந்த பைக் ஷோரூம்.. சாம்பலாய் போன 36 எலெக்ட்ரிக் பைக்குகள்!

பக்கென தீப்பற்றி எரிந்த பைக் ஷோரூம்.. சாம்பலாய் போன 36 எலெக்ட்ரிக் பைக்குகள்!

தீயில் கருகிய வாகனங்கள்

தீயில் கருகிய வாகனங்கள்

ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 எலெக்ட்ரிக் பைக்குகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

2022ம் ஆண்டின் தொடக்கம் முதலே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகள் ஆகியன தீப்பிடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடிப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.இதனையடுத்து மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டில் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. அதன் பின்னர் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஆந்திராவில் ஏற்பட்ட தீவிபத்தால் 36 எலெக்ட்ரிக் பைக்குகள் எரிந்து சேதமடைந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து சேதமாகியுள்ளன. பாலகொண்டா நகரில் உள்ள மனம் மோட்டார்ஸ் என்ற எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் திங்கட்கிழமை அதிகாலை தீப்பற்றியுள்ளது. ஷோரூமிற்குள் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 36 எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் பேட்டரிகள் எரிந்து நாசமாகின. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த விபத்துக்குக் காரணம் ஷார்ட் சர்க்யூட்டாக இருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் பைக்குகள் மற்றும் இதர பொருட்கள் உட்பட 50 லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லட்சம் என ஷோரூம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read : சிஎன்ஜி vs ஹைபிரிட் கார் - குறைந்த செலவில் இயங்கும் வாகனம் எது?

தமிழகத்தில் இரவில் சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்த போது வெளியான புகையால், தந்தை, மகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை உருவாக்கியது. கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் இரவு நேரத்தில் திடீரென தீப்பற்றியது.

ஷோரூமின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீ, மெல்ல மெல்ல கட்டிடம் முழுவதும் பரவியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதிருந்த நிலையில், தற்போது மற்றொரு எலெக்ட்ரிக் ஷோரூமில் தீ பற்றியுள்ளது மக்களிடையே மீண்டும் மின்சார வாகனங்கள் மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Published by:Janvi
First published:

Tags: Andhra Pradesh, Electric bike, Fire accident