புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டில் 36 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சுமார் 300 சிறைவாசிகள் இருக்கிறார்கள். அவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும்போது சுயதொழில் செய்ய பல்வேறு பயிற்சிகளை சிறை நிர்வாகம் அளிக்கிறது.
அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காகச் சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் புதர்மண்டிக் கிடந்த மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து அசத்தியிருக்கிறார்கள் சிறைவாசிகள். பல மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 64 வகைப் பழச்செடிகள், 60 வகை மூலிகைச் செடிகளையும் நட்டு இயற்கை விவசாயம் நடக்கிறது.
வாழ்நாள் முழுதும் பழம் தரும் அன்னாசியை கொல்லிமலையிலிருந்து 10,000 செடிகளை கொண்டு வந்து பயிரிட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1,350 வாழைகள், தக்காளி, கத்திரி, வாழை, தர்பூசணி, பப்பாளி, பச்சை மிளகாய், சுண்டக்காய், உளுந்து, சூரியகாந்தி, இஞ்சி, மஞ்சள், ஏலக்காய், ஆப்பிள், சாத்துக்குடி போன்றவற்றை பயிரிட்டு தினமும் சாகுபடி செய்து சிறையின் உணவு கூடத்தில் பயன்படுத்துகின்றனர்.
சிறை வளாகத்தில் உரம், பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகின்றன. இவற்றை முறையாக கைதிகளே பராமரிக்கின்றனர். செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்று சிறையில் பல நாள் தூங்கியதில்லை. தற்போது விவசாயம் செய்வதால் நிம்மதியாக தூங்குகிறோம். ஒரு விதை செடியாக மலரும் போதும் மிக மகிழ்ச்சி அடைகிறோம். அழுகினால் இயற்கை முறையில் எப்படி பாதுகாப்பது என விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து விட்டோம். முன்பு நாள் ஒன்றிக்கு 25 ரூபாய் சம்பளம். இன்று விவசாயத்தால் நாள் ஒன்றிக்கு 200 ரூபாய் சம்பளம். கைதியாய் வந்த நாங்கள் விவசாயியாக வெளியே செல்வோம் என கைதிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பயிரிட்டு வளர்ந்த காய்கறி, கனி, பூக்களின் அறுவடை திருவிழா சிறைச்சாலை வளாகத்தில் நடந்தது. 130 கத்திரிக்காய், மாங்காய், 30 கிலோ சாமந்தி பூ, எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை என 300 கிலோ எடையிலானவற்றை ஒருமுறை அறுவடை செய்கின்றனர். சிறை வளாகத்தில் நடந்த அறுவடை திருவிழாவில் சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிசெல்வன் ஆகியோர் அறுவடை செய்து துவக்கி வைத்தனர். இவை அனைத்தும் சிறைச்சாலையின் சமைய கூடத்தில் சாப்பாடு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puducherry, Vegetable