30 சாதுக்களுக்கு கொரோனா - கும்பமேளா முன்கூட்டியே முடிவதாக நிரஞ்சனி அகாதா அறிவிப்பு!

30 சாதுக்களுக்கு கொரோனா - கும்பமேளா முன்கூட்டியே முடிவதாக நிரஞ்சனி அகாதா அறிவிப்பு!

கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்ற 30 சாதுக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கும்பமேளா திருவிழாவை நாளையுடன் (17ம் தேதியுடன்) முடித்துக்கொள்வதாக நிரஞ்சனி அகாதா தெரிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.17 லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்தநிலையில், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. சுமார் 30 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம். இதற்காக ஹரித்வாருக்கு நாளொன்றுக்கு 10 லட்சம் பேர் வருகை தருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த விழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

  இதனால், கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. கும்பமேளா விழாவில், கங்கை நதியில் நீராட மூன்று நாட்கள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் சாதுக்கள், பக்தர்கள் என 50 லட்சத்துக்கு அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி புனித நீராடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், கும்ப மேளா திருவிழா நடைபெற்றுவரும், ஹரித்வார் கொரோனா பரப்பும் மையமாக மாறி வருகிறது.

  கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதிவரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தது. இதில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அச்சம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.

  இதையடுத்து, 13 அகாராக்களில் ஒன்றான நிரஞ்சனி அகாதா, நாளையுடன் கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிரஞ்சனி அகாதாவின் செயலாளர் ரவி்ந்திர பூஜாரிமகாரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில் “ ஹரித்துவாரில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து கும்பமேளா திருவிழாவை நிரஞ்சனி அகாதா சனிக்கிழமையுடன் (17ம் தேதி) முடித்துக்கொள்கிறது.

  தற்போதைய கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடன் வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் இதுபோன்று கூட்டம் கூடுவது முறையானது அல்ல என்று கூறியுள்ளார். மேலும், கும்பமேளாவை முடித்துக்கொள்வது தொடர்பான இறுதி முடிவை மாநில அரசு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கும்பமேளா முன்கூட்டியே முடித்துவைக்கப்படாது என்றும் திட்டமிட்டப்படி ஏப்.30ம் தேதி வரை நடைபெறும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடைய கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து இந்திய அகாதா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: