காஷ்மீர் : குருதிக்கு நடுவே அழுது களைத்த குழந்தை... பயங்கரவாதத்தின் கொடூரத்தை உணர்த்திய சம்பவம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலின் நடுவே உயிர் பிழைத்த மழலையின் கண்ணீரும், குழந்தையை மீட்ட காவலர்களின் செயலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் : குருதிக்கு நடுவே அழுது களைத்த குழந்தை... பயங்கரவாதத்தின் கொடூரத்தை உணர்த்திய சம்பவம்
மீட்கப்பட்ட 3 வயது குழந்தை
  • Share this:
காஷ்மீர் எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப்படையினர் நடத்தும் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு யுத்தகளத்தில் தான், காஷ்மீர் காவல்துறையினர் தங்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சோபூர் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை காஷ்மீர் காவல்துறையினரும், சிஆர்பிஎஃப் வீரர்களும் முற்றுகையிட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்தனர். இதில் அப்பகுதிக்கு வந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்தார். ஆனால் அவருடன் வந்த 3 வயது குழந்தை, துப்பாக்கிக்குண்டு மழையில் இருந்து தப்பி நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது.

துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட உடலில் இருந்து பெருக்கெடுத்த குருதியை கண்டு குழந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தவித்து நின்றது. கண்ணீர் ஆறாக ஓட, அழுது களைத்த கண்களோடு தவித்து நிற்கும் குழந்தையின் முகமே, பயங்கரவாதத்தின் கொடூரத்தை உணர்த்த போதுமானது.


குழந்தையை மீட்ட காவல்துறையினர், மழலையை சமாதானம் செய்யும் புகைப்படங்களும், குழந்தையை காரில் அமரவைத்து அழைத்துச்செல்லும் வீடியோவும் காண்போரை உருக்குவதாக அமைந்துள்ளது.

பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்த போது, சவாலானதாக இருந்தாலும் குழந்தையை மீட்பதே தங்கள் முதல் நோக்கமாக இருந்ததாக காவலர் ஆசம்கான் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தையை தாயிடம் காஷ்மீர் காவல்துறையினர் ஒப்படைத்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு இடையேயும், 3வயது குழந்தையை மீட்ட பாதுகாப்புப்படையினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading