3 வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசு 3 வேளாண் சீர்தித்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளைபொருட்கள் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்த்து ஓராண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேத்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலோயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை அதற்கான ஒப்புதலையும் வழங்கி இருக்கிறது.
இந்நிலையில், அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடக்கவிருப்பது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர் எனவும், இதில் நாட்டு மக்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசின் கொள்கைகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினாலும், நாடாளுமன்ற அவைகளின் கண்ணியம் நிலைநாட்டப்பட வேண்டும் என உறுப்பினர்களுக்கு மோடி அறிவுறுத்தினார். அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தவும், உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
அவையில் அமைதியான முறையில் கேள்விகளை எழுப்பி, எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றார். 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன என்ற மைல்கல்லை நெருங்கியுள்ள சூழலில், புதிய வகை ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளதாக எச்சரித்தார். நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் 3 பேர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் சார்பில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், திமுகவை சேர்ந்த, கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் மற்றும் அப்துல்லா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.
Must Read : ஒமைக்ரான் வைரஸ் : 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடு
அவர்கள், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு முன்னிலையில், திமுக உறுப்பினர்கள் 3 பேரும் எம்.பி.,க்களாக தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agricultural act, Farmers, Lok sabha, Parliament