மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்டுக்கட்டான பணத்துடன் பிடிபட்டனர். இது தொடர்பாக ஹவுரா காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வாாதி பங்காலியா கூறுகையில், ஒரு கருப்பு நிறக் காரில் அதிக அளவிளான பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்பைடில், நாங்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டோம். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு காரை சோதனை செய்த போது அதில் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்டுக்கட்டான பணத்துடன் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்சால் ஆகியோர் தான் இந்த சோதனையின் போது பிடிபட்டனர். இவர்களின் காரில் இருந்த பணத்தை எண்ணுவதற்கு அருகே இருந்த வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இவர்களிடம் இருந்து சுமார் ரூ.48 லட்சம் ரொக்கம் பிடிபட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
பணம் குறித்து எம்எல்ஏக்களிடம் விசாரிக்கையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி உலக பழங்குடி இன தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தங்கள் தொகுதி பழங்குடி மக்களுக்கு பரிசு வாங்க இந்த பணத்துடன் மேற்கு வங்கம் வந்ததாக அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். ஆனால், பணத்திற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்பதால் காவல்துறை அவர்களின் விளக்கத்தை ஏற்கவில்லை. எனவே, அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.
ஜார்கண்ட்டில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க பாஜக செய்யும் சதி திட்டம் என காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளது. ஆப்ரேஷன் கமலாவை ஜார்கண்ட்டிலும் பாஜகவினர் ஆரம்பித்துள்ளனர் என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க:
அசுத்தமான படுக்கையில் துணை வேந்தரை படுக்க வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்.. பஞ்சாப்பில் வெடித்த சர்ச்சை
மேற்கு வங்கத்தில் கல்வி துறையில் பணி நியமன ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ரூ.50 கோடிக்கும் அதிகமான பணமும், கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் பிடிபட்டது. இதனால் ஆளும் திரிணாமுல் அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.