HOME»NEWS»NATIONAL»25 kg jewellery theft in hosur muthoot finance bank and the thieves are arrested srs

ஓசூரில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை : கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை... காட்டிக் கொடுத்த ஜிபிஎஸ்

லாரியில் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறத்தில் உள்ள பெட்டிபோன்ற மறைவிடத்தில் நகைகளைப் பதுக்கி வைத்திருந்தனர்.

ஓசூரில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை : கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை... காட்டிக் கொடுத்த ஜிபிஎஸ்
  • Share this:

ஒசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை ஜி.பி.எஸ் கருவிகளின் உதவியுடன் தெலுங்கானாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில், முத்துாட் பைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நிறுவனத்தை ஊழியர்கள் வழக்கம் போல திறந்துள்ளனர். மேலாளர் சீனிவாச ராகவ் மற்றும் மாருதி பிரசாத் உள்ளிட்ட 4 பேர் அலுவலகப் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், காலை 9.40 மணியளவில், 7 பேர் கொண்ட கும்பல் தலைக்கவசம் அணிந்த நிலையில் உள்ளே நுழைந்துள்ளனர்.அவர்களில் ஒருவர் திடீரென காவலாளி கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கடையின் உள்ளே இருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஊழியர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களின் வாயில் டேப் போட்டு ஒட்டிய கும்பல், கையை பின்புறம் துணியால் கட்டியுள்ளனர். பின்னர் 3 பேரை ஒரு அறையிலும் இன்னொருவரை மற்றொரு அறையிலும் தரையில் அமர வைத்துள்ளனர். மேலாளர் சீனிவாச ராகவை கடுமையாக தாக்கிய கும்பல் அவரிடம் இருந்து சாவியைப் பறித்து லாக்கரைத் திறந்துள்ளனர். லாக்கர்களில் இருந்து தங்கம், வைரம், மற்றும் வெள்ளி நகைகளை 3 பைகளில் நிரப்பிய கொள்ளையர்கள், பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவிக்களில் பதிவாகியுள்ளன.



சிறிது நேரம் கழித்து வாடிக்கையாளர் ஒருவர் நகை எடுக்க வந்த போதுதான் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த ஓசூர் நகர போலீசார் ஊழியர்களை மீட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், 11 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இந்த நிலையில்தான் முத்துாட் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு ஒரு முக்கிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது

முத்துாட் நிறுவனத்தில் இதுபோன்ற நகைக் கொள்ளைகளைத் தடுப்பதற்காகவும், நகைகளை சரிபார்ப்பதற்காகவும், ஒவ்வொரு நகையோடும் ஒரு டேக் கட்டப்பட்டிருக்கும், அந்த டேக்கில், ஸ்டிக்கர் வடிவிலான ஜிபிஎஸ் கருவி ஒட்டப்படும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கொள்ளையர்களை போலீசார் பின் தொடர்ந்த போது, கர்நாடக மாநிலம் ஆனேகல் என்ற இடத்தில் ஒரு நகைப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஜிபிஎஸ் கருவிகளின் சிக்னல்களை ஆய்வு செய்தபோது ஹைதராபாத் அருகே சம்சாத்பூர் என்ற இடத்தில்7 பேரும் பதுங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்துக் கைது செய்தனர். கொள்ளையர்களிடம் இரு்ந்து அனைத்து நகைகள், 7 துப்பாக்கிகள், மற்றும் 2 கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  விசாரணையில் அவர்களில் 4 பேர் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் ஜார்க்கன்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. நிதி நிறுவனத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக தப்பிச் சென்றவர்கள் வழியில் ஓரிடத்தில் கன்டெய்னர் லாரியில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்

லாரியில் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறத்தில் உள்ள பெட்டிபோன்ற மறைவிடத்தில் நகைகளைப் பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் அந்த பெட்டி போன்ற இடத்தில் இருந்து நகைகளையும் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 7 பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களின் கொள்ளைத் திட்டம், அதை அரங்கேற்றி விதம் ஆகியவை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சென்றபோது ஆந்திர எல்லையில் வைத்து மத்திய பிரதேச கொள்ளைக் கும்பல்தான் கொள்ளையடித்துச் சென்றது. அந்த வழக்கில், 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தனியார் நிதி நிறுவனத்திலும் மத்திய பிரதேச கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டி சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Published by:Ram Sankar
First published: