டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏறக்குறைய 24,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அங்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.34 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் நோயாளிகளுக்குத் அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 12 மாநிலங்களில் நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், கோவிட் சிறப்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் நேற்றைய தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த மாதத்தில் மட்டும் நாட்டில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக ஒரே படுக்கையை இரண்டு நோயாளிகள் பகிர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கவேண்டிய தேவை உள்ளது.
இதையடுத்து, டெல்லியில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது டெல்லி அரசு. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏறக்குறைய 24,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு அனைத்தும் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது நிலைமை மிகவும் தீவிரமடைவது கவலை அளிக்கிறது. ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நவம்பரில் 4,100 படுக்கைகளை வழங்கிய மத்திய அரசு, தற்போது 1,800 படுக்கைகளை மட்டுமே வழங்கியுள்ளது. டெல்லியில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு அல்லது நான்கு நாட்களில் 6,000 படுக்கைகள் அமைக்கப்படும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.