சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 32 பேர் காயமடைந்துள்ளனர், ஒருவர் மாயமாகி இருக்கிறார்.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமான சத்தீஸ்கரின் சுமார் 2000 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய தனித்தனி குழுக்கள் மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்கான அதிரடி ஆபரேஷன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் நிறைந்த பிஜாபூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள தெற்கு பஸ்தார் காடுகளுக்குள் தேடுதல் வேட்டஒயை பாதுகாப்புப் படையினர் துவங்கினர். மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உயரிய பிரிவான CoBRA
எனும் கமாண்டோ பட்டாலியன், மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG), சிறப்பு அதிரடிப்படை (STF) போன்ற முக்கிய பிரிவு படையினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தரீம், உசூர், பமேத் பகுதிகள் மற்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் இலக்காக கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
சத்தீஸ்கர் மாவட்ட தலைநகரமான ராய்பூரில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள பகுதியில் இந்த தேடுதல் வெட்டை நடைபெற்றது.
தரீம் பகுதியில் இருந்து கிளம்பிய பாதுகாப்புப் படை குழுவினர் ஜோனாகுடா பகுதியில் முன்னேறிச் சென்ற போது மாவோயிஸ்ட்களின் பிரிவான PLGA குழுவினர் அங்கு பதுங்கியிருந்தனர். பாதுகாப்புப் படையினர் வருவதை அறிந்ததும் அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட தொடங்கினர். நேற்று மதியம் 12 மணியளவில் இந்த மோதல் தொடங்கி சுமார் 4 மணி நேரம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
இந்த பயங்கர மோதலில் பாதுகாப்புப் படை தரப்பில் 22 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் மாயமாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படை வீரர்களிடமிருந்து ஆயுதங்கள், சீருடை மற்றும் பிற உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்ற மாவோயிஸ்ட்களை ட்ரோன் மூலம் கண்காணித்து, தேடும் முயற்சியும் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சரத் பவார், பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அசாமில் தேர்தல் பரப்புரைக்காக சென்றுள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், இன்று மாலை மாநிலத்திற்கு வந்து சேர்வார் எனவும் அவர் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chattisgarh, Maoist