• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • படிப்பை கைவிடாமல் குடும்பத்துக்காக ஆட்டோ ஓட்டும் 21 வயது இளம்பெண்! குவியும் பாராட்டு

படிப்பை கைவிடாமல் குடும்பத்துக்காக ஆட்டோ ஓட்டும் 21 வயது இளம்பெண்! குவியும் பாராட்டு

21 வயதான இளம்பெண்  பன்ஜீத் கவுர்

21 வயதான இளம்பெண் பன்ஜீத் கவுர்

குடும்ப வருமானத்தைப் போக்க ஆட்டோ ஓட்டும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு பலரும் வேலை இழப்பு, வருவாய் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இந்த பாதிப்புகள் இன்றளவும் தொடர்வதால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வளவு சோதனைகளுக்கும் இடையிலும் ஒருசிலர் செய்யும் செயல் நமக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாக இருக்கிறது. அந்தவகையில், 21 வயது இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்துக்காக ஆட்டோ ஓட்டும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். தந்தை படும் கஷ்டத்தை உணர்ந்து அவருக்கு உதவியாக இருக்கும் இளம் பெண் பலருக்கும் முன்னுதாரணமாகியுள்ளார்.

காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்தார் கோரக் சிங் . பள்ளி வாகனத்தின் ஓட்டுநராக இருந்த அவர், கொரோனா காரணமாக வேலையில்லாமல் இருந்துள்ளார். பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்காத நிலையில் குடும்பத்துக்காக ஆட்டோ ரிக்ஷா டிரைவர் வேலை செய்து வருகிறார். அவரின் வருமானம் குடும்ப தேவைக்கு போதுமானதாக இல்லாததால், சர்தார் கோரக்சிங்கின் மூத்தமகளான 21 வயது நிரம்பிய பன்ஜீத் கவுர், தந்தைக்கு உதவியாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக மாறியுள்ளார். இது குறித்து பேசிய பன்ஜீத் கவுர், " பள்ளி வாகன ஓட்டுநராக இருந்த எனது தந்தை கொரோனா காரணமாக வேலை இழந்துவிட்டார். பின்னர், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அதன்மூலம் அவர் ஈட்டும் வருவாய் போதுமானதாக இல்லை. இதனால் அவருக்கு உதவியாக நானும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக வேலை செய்து வருகிறேன்" என்றார்.

ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்யும் அதே சமயத்தில் பன்ஷீத் கவுர், தனது படிப்பை கைவிடவில்லை. தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், வரும்காலத்தில் பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே தனது இலக்கு எனக் கூறியுள்ளார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருக்கும் அவர், பார்ட் டைமாக ஆட்டோ ஓட்டி குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறார். அக்காவைப்போல் தங்கை தவீந்தர் கவுரும் ஆட்டோ ஓட்டுகிறார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டி பலருக்கும் முன்னுதாரணமாக அக்கா இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாக தங்கை தவீந்தர் கவுர் தெரிவித்தார். மகள் ஆட்டோ ஓட்டுவது குறித்து பேசிய தந்தை சர்தார் கோரக்சிங், மூத்த மகள் பன்ஜீத் கவுரை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார். எந்த துறையிலும் சாதிக்கும் திறமை தன் மகள்களிடம் இருப்பதாக தெரிவித்த அவர், அவர்களது விரும்பம்போல் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்தெடுத்துக்கொள்ளட்டும் எனக் கூறினார்.

வேலையில்லாமல் வீட்டில் இருந்தபோது, தனக்கு ஆட்டோ ஓட்டி பழக்கிவிடுமாறு மகள்கள் கேட்டதாக சர்தார் தெரிவித்தார்.  அதனால், அவர்களுக்கு ரிக்ஷா எப்படி ஓட்டவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தேன். தற்போது எனக்கு உதவியாக இருக்கிறார்கள் என மகிழ்ச்சியாக தெரிவித்தார். இது குறித்து, உதம்பூர் வட்டார இணை போக்குவரத்து அலுவலர் ராச்சனா சர்மா பேசியதாவது, தந்தைக்கு உதவியாக இருக்கும் பன்ஜீத் கவுர் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என பாராட்டினார். முன்னதாக, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பூஜா என்ற பெண் முதல் பேருந்து ஓட்டுநர் என்ற சிறப்பை அண்மையில் பெற்றார். 3 குழந்தைகளுக்கு தாயான அவர், கத்துவா மாவட்டத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரை டிவிட்டரில் பாராட்டியிருந்த மத்திய அமைச்சர் ஜிஜேந்தர் சிங், நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பூஜா முன்னுதாரணமாக இருக்கிறார் எனப் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: